

புதுடெல்லி,
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து குடியரசுத் தலைவர் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரும், முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சியின் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஏற்கெனவே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தெஹ்சீன் பூனாவல்லா, வழக்கறிஞர் மனோகர் லால் சர்மா ஆகியோரும் உச்ச நீதிமன்றத்தில் குடியரசுத் தலைவர் உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த நிலையில் இப்போது இவர்களும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு உரிமைகளை திரும்பப் பெற்ற குடியரசுத் தலைவரின் உத்தரவுக்கு எதிரான மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு உரிமைகள், தனி அந்தஸ்துகள் வழங்கப்பட்டு இருந்த அரசியலமைப்புச் சட்டம் 370-வது பிரிவில் மத்திய அரசு திருத்தம் செய்து நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்த மசோதா கொண்டு வந்து நிறைவேற்றியது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. லடாக் பகுதி யூனியன் பிரதேசமாகவும், ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை உள்ள யூனியன் பிரதேசமாகவும் மத்திய அரசு அறிவித்தது.
இதுதொடர்பாக குடியரசுத் தலைவரும் உத்தரவு பிறப்பித்து, 370 பிரிவு திருத்தப்பட்டதாகவும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் காஷ்மீர் மாநிலத்துக்குச் செல்லுபடியாகும் என்று அறிவித்தார்.
இதை எதிர்த்து காஷ்மீரைச் சேர்ந்த ஷகிர் ஷபிர் என்ற வழக்கறிஞர் குடியரசுத் தலைவர் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறுகையில், " ஜம்மு காஷ்மீர் மாநில சட்டப்பேரவையின் உத்தரவைப் பெறாமல் மாநிலத்தின் சிறப்பு உரிமைகளை குடியரசுத் தலைவர் ரத்து செய்துள்ளார். இது அவரின் அதிகாரத்துக்கு அப்பாற்பட்டதாகும்.
மாநிலத்தில் உள்ள சட்டப்பேரவைதான் மக்களின் விருப்பத்தைப் பிரதிபலிப்பவை, ஜம்மு காஷ்மீரின் வரலாறு, அதன் எல்லை ஆகியவற்றில் மாற்றம் கொண்டுவர சட்டப்பேரவையின் ஒப்புதல் தேவை. மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை பொறுப்பற்றதனம், அரசியலமைப்பு அதிகாரம் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் வாழும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் ஆபத்துக்குள்ளாகி இருக்கறது. மாநில சட்டப்பேரவையின் ஆலோசனை,ஒப்புதல் இன்றி ஒருதலைப்பட்சமாக அதிகாரத்தைப் பயன்படுத்தி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் தற்போது ஊடரங்கு உத்தரவால் மக்களின் வாழ்க்கை முடங்கியுள்ளது. மக்கள் வலுக்கட்டாயமாக தங்கள் வீடுகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ளார்கள், மாநிலம் முழுவதும் ராணுவப்படைகள் நிறைந்துள்ளன. அரசின் சட்டவிரோத, தன்னிச்சையான செயல்பாடுகளில் ஜனநாயக நாட்டின் அடிப்படை அம்சங்கள் ஆட்டம் கண்டுள்ளன" என மனுவில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சியின் சார்பில் முன்னாள் சபாநாயகர் முகமது அக்பர் லோன், ஓய்வு பெற்ற நீதிபதி ஹஸ்னன் மசூதி ஆகியோர் குடியரசுத் தலைவர் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து குடியரசுத் தலைவர் பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது, அங்கீகாரமற்றது, செயல்படுத்த முடியாது. ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்தச் சட்டம் சட்டவிரோதமானது என்று அறிவிக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளனர்.
ஐஏஎன்எஸ்