

ஹரியாணா மாநிலத்துக்கு இனி காஷ்மீரிலிருந்து மணப்பெண் கொண்டுவரலாம் எனப் பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார் அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370, 35-ஏ ஆகியவற்றை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதனால், காஷ்மீர் பெண்கள் இனி வெளி மாநிலத்தவரை திருமணம் செய்தால் சொத்துரிமை இல்லை என்ற நிலை மாறுகிறது.
இதனை சுட்டிக்காட்டிய ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார், "ஹரியாணாவில் ஆண் - பெண் விகிதாச்சாரம் குறைந்தபோது அமைச்சர் தனகர் ஒரு யோசனை சொன்னார். நாம் ஏன் பிஹாரில் இருந்து மருமகள்களைக் கொண்டுவரக்கூடாது என்றார். ஆனால், இப்போது காஷ்மீரில் பெண் எடுக்கும் வாய்ப்பும் இருக்கிறது. நகைச்சுவைக்கு அப்பால் ஒரு கருத்தைச் சொல்ல விரும்புகிறேன். ஒரு சமூகத்தில் ஆண் - பெண் விகிதாச்சாரம் சீராக இருந்தால் அந்த சமூகம் நேர்த்தியாக இருக்கும்.
ஹரியாணாவில் பாலின விகிதாச்சாரம் மிகவும் மோசமாக இருந்தது. 1000 ஆண் பிள்ளைகளுக்கு 850 பெண் பிள்ளைகள் என்ற நிலையிலேயே இருந்தது. இங்கே பெண் குழந்தைகள் கொல்லப்படுவதாக சர்ச்சைகள் எழுந்தன. அப்போதுதான் பெண் பிள்ளைகளைக் காப்போம் என்ற பிரச்சாரத்தைத் தொடங்கினோம். இப்போது 1000 ஆண் பிள்ளைகளுக்கு 933 பெண் பிள்ளைகள் என்ற விகிதத்தை அடைந்துள்ளோம்" என்றார்.
என்னதான் கட்டார் நகைச்சுவைக்காக கூறினேன் என்று சொல்லி இருந்தாலும் கூட, சிறப்பு அந்தஸ்து ரத்தால் இனி காஷ்மீர் பெண்களைத் திருமணம் செய்ய முடியும் என்பதுதான் பெரிய பலன் என்பதுபோன்ற அவரின் பார்வை கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.
கட்டார் சர்ச்சைப் பேச்சுகளுக்கு ஏற்கெனவே சொந்தக்காரர்தான். பாலியல் பலாத்காரங்கள் குறித்து அவர் கடந்த நவம்பர் மாதம் பேசும்போது, "பாலியல் அத்துமீறல் சம்பவங்களில் 90% சம்பந்தப்பட்டவர்கள் இருவருமே அறிமுகமானவர்களாகவே இருக்கின்றனர். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு வரும்போது மட்டும் சம்பந்தப்பட்ட பெண் காவல் நிலையத்துக்குச் சென்று பலாத்காரம் என வழக்கு கொடுத்துவிடுகிறார்" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இப்போது காஷ்மீர் பெண்கள் பற்றி பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
சட்டப்பிரிவு 370 ரத்து குறித்து ஏற்கெனவே முசாபர் நகரைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ., "இனி காஷ்மீரின் வெள்ளைத்தோல் பெண்களைத் திருமணம் செய்யலாம்" எனக் கூறி சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.