குஜராத்தில் கனமழை: சர்தார் சரோவர் அணை முதன்முறையாக திறப்பு

குஜராத்தில் கனமழை: சர்தார் சரோவர் அணை முதன்முறையாக திறப்பு
Updated on
2 min read

அகமதாபாத்

குஜராத்தில் கனமழை காரணமாக சர்தார் சரோவர் அணை முதன்முறையாகத் திறக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் மாநிலத்தில் நர்மதை அணையின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ளது சர்தார் சரோவர் அணை. கடந்த 1961-ம் ஆண்டில் அன்றைய பிரதமர் நேரு, நர்மதை நதியில் சர்தார் சரோவர் அணை கட்ட அனுமதி அளித்தார். 1979-ம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டது.

1987-ல் அணையின் கட்டுமானப் பணிகள் தொடங்கின. அணை திட்டத்தால் பழங்குடிகள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறி நர்மதா நதி பாதுகாப்பு அமைப்பு (நர்மதா பச்சாவோ அந்தோலன்) உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் 2000-ம் ஆண்டு அக்டோபரில் சில கட்டுப்பாடுகளை விதித்து தடை உத்தரவை நீக்கியது.

குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது அணை கட்டுமானப் பணிகள் வேகப்படுத்தப்பட்டு. அவர் பிரதமரான பிறகு 2017-ம் ஆண்டு அணை முழுமையாகத் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிலையில் நாடு முழுவதும் கடுமையான மழை பெய்து வரும் நிலையில் குஜராத் மாநிலத்தில் பெரும் மழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் குஜராத்தில் உள்ள அணைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன. கட்டப்பட்டதில் இருந்து சர்தார் சரோவர் அணை முதன்முறையாக முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. 139 மீட்டர் உயரம் கொண்ட இந்த அணையில் 131 மீட்டர் அளவுக்கு மட்டுமே தண்ணீர் சேமிக்க அனுமதி உள்ளது.

தண்ணீர் வரத்து அபாய அளவை எட்டியுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணையைத் திறக்க முதல்வர் விஜய் ரூபானி உத்தரவிட்டார். இதன்படி, அணையின் 30 ஷட்டர்களில் 26 ஷட்டர்கள் திறந்துவிடப்பட்டன. ஷட்டர்கள் வழியாக நீர் சீறிப்பாய்ந்து வருகிறது. சர்தார் சரோவர் அணை பகுதியில் தான் சர்தார் வல்லபாய் படேலுக்கு பிரமாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in