Published : 10 Aug 2019 11:19 AM
Last Updated : 10 Aug 2019 11:19 AM

கேரளாவில் வதைக்கும் மழைக்கு 42 பேர் பலி; நிலச்சரிவில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தில் கடந்த இரு நாட்களாக வதைக்கும் கனமழையாலும், அதனால் ஏற்பட்ட நிலச்சரிவாலும் இதுவரை 42 பேர் பலியாகியுள்ளனர் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயநாட்டில் உள்ள புதுமலா கிராமத்தில் ஒரு தேயிலைத் தோட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 100-க்கும் மேற்பட்டோர் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஆனால், வயநாடு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மீட்புப் பணிகளில் ஈடுபடுவது பெரும் சவாலாக இருந்து வருகிறது.

மாநிலத்தில் 988 நிவாரண முகாம்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

42 பேர் பலி

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து தென்மாநிலங்களில் கனமழை கொட்டி வருகிறது. கேரள மாநிலத்தில் கடந்த இரு நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாது பெய்துவரும் கனமழையால் கடந்த ஆண்டைப் போன்ற சூழல் உருவாகிவிடுமோ என மக்கள் அஞ்சுகிறார்கள்.

கேரள மாநிலத்தில் இடைவிடாது பெய்து வரும் மழைக்கு இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அரசு சார்பில் வெளிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் மட்டும் 20 பேரும், வயநாடு பகுதியில் 9 பேரும் கடந்த 8-ம் தேதி நிலவரப்படி உயிரிழந்துள்ளனர்.

கனமழை தொடரும்

இதற்கிடையே புதிய காற்றழுத்தம் உருவாகி இருப்பதால், கேரளாவின் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. கேரள வானிலை மையம் வெளியிட்டஅறிக்கையில், " எர்ணாகுளம், இடுக்கி, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு அடுத்த இரு நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

இதுதவிர பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், திருச்சூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. வரும் 15-ம் தேதி வரை கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. எர்ணாகுளம், இடுக்கி, மலப்புரம், வயநாடு ஆகிய மாவட்டங்களில் வரும் 13-ம் தேதி வரை கனமழை பெய்யும்" என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஒரு லட்சம் மக்கள்

தற்போது பெய்யும் கனமழையால் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்க பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட மக்களை பாதுகாப்பாகத் தங்க வைப்பதற்காக 988 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 699 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் வயநாட்டில்தான் சேதம் அதிகம். அங்கு 24 ஆயிரத்து 990 பேர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மிகப்பெரிய நிலச்சரிவு

புதுமலா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு (படம் சிறப்பு ஏற்பாடு)

இதற்கிடையே வயநாடு மாவட்டம் புதுமலா கிராமத்தில் நேற்று ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவில் ஏராளமானோர் சிக்கி இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால், எத்தனை பேர் சிக்கி இருக்கிறார்கள் எனத் தெரியவில்லை.

ஆனால், நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், "100-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியை பாறைகள், மண் மொத்தமாக மூடுவதைப் பார்த்தோம். இதில் வீடுகள், கோயில், மசூதி, மக்களின் இரு சக்கர வாகனங்கள் என அனைத்தும் மூடப்பட்டன" என்று தெரிவித்தனர்.

புதுமலா கிராமத்தில் உள்ள மேப்பாடி பஞ்சாயத்தில்தான் இந்த மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இங்குள்ள தனியார் தேயிலைத் தோட்டத்தில் தங்கி வேலைசெய்யும் 100-க்கும் மேற்பட்ட வெளி மாநிலத்தவர்கள்தான் இந்த நிலச்சரிவில் சிக்கியதாகக் கூறப்படுகிறது.

மீட்புப் பணியில் சிக்கல்

வயநாடு பகுதியில் தொடர்ந்து இன்றும் மழை பெய்துவருவதால், மீட்புப் பணியில் ஈடுபடுவது பெரும் சவாலாக இருக்கிறது. இதனால், நிலச்சரிவில் சிக்கியிருப்பவர்களைத் தேட முடியாமல் மீட்புப் படையினர் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதற்கிடையே அப்பகுதி தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றி வரும் ஆயிரத்துக்கும் அதிகமான மக்களை மீட்புப் படையினர் மீட்டு, அவர்களைப் பாதுகாப்பாக முகாம்களுக்கு அழைத்துச் சென்றனர்.

புதுமலா எஸ்டேட் பகுதியில் இருந்து மக்களை மீட்டுவரும் மீட்புப்படையினர் (படவிளக்கம்)

வயநாடு மாவட்ட ஆட்சியர் என்எஸ்கே உமேஷ் கூறுகையில், "புதுமலா பகுதியில் வசித்து வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவில் இருந்து இதுவரை 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிக்குள் செல்ல முடியவில்லை. மிகவும் ஆபத்தாக இருக்கிறது. ராணுவம், பேரிடர் மீட்புப் படையினர்தான் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் " எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே வயநாட்டில் உள்ள பானாசூரா அணை நிரம்பும் தருவாயில் இருப்பதால், அங்கிருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

ரயில்கள் ரத்து

தொடர்ந்து பெய்து வரும் மழையால் ரயில் போக்குவரத்து முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. கண்ணூர்-ஆலப்புழா எக்ஸ்பிரஸ், மங்களூரு-நாகர்கோவில் பராசுரம் எக்ஸ்பிரஸ், மங்களூரு-வடக்கன்சேரி, மங்களூரு-நாகர்கோயில் எமாத் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

மங்களூரு, திருச்சூர், திருவனந்தபுரம், ஹைதராபாத் இடையே இயக்கப்படும் ரயில், திருவனந்தபுரம், கோவை இடையே இயக்கப்படும் சபரி எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவையும் ரத்து செய்யப்பட்டுள்ளன

மேலும், கண்ணூர்-திருவனந்தபுரம் ஜன் சதாப்தி, கண்ணூர், சொர்னூர் இடையே இயக்கப்படும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டன.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x