

ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பெற்றோர் தான் விரும்பிய சொகுசுக் காரை வாங்கித் தராத காரணத்தால் தனக்குப் பரிசாக அளிக்கப்பட்ட புதிய காரை ஆற்றில் தள்ளிய சம்பவம் நடந்துள்ளது.
ஹரியாணாவின் யமுனா நகரைச் சேர்ந்த இளைஞருக்கு அவரது பெற்றோர் பிஎம்டபிள்யு காரைப் பரிசாக வாங்கித் தந்துள்ளனர். ஆனால், அந்த இளைஞரோ ஜாகுவார் என்ற மற்றொரு ரக சொகுசுக் காரை விரும்பியுள்ளார்.
இந்நிலையில், தனது விருப்பத்தை நிறைவேற்றாத பெற்றோருக்கு எதிர்ப்பைத் தெரிவிப்பதாக நினைத்து பிஎம்டபிள்யு காரை ஆற்றில் தள்ளியுள்ளார். மேலும் அந்தக் காட்சியை வீடியோவாகப் பதிவு செய்து அதனை சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளார். இதனை ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் சம்பவ இடத்திலிருந்த காவலர் கூறியுள்ளார்.
நீரில் தள்ளப்பட்ட கார் ஆற்றின் குறுக்கே இருந்த புதரில் சிக்கிக் கொண்டது. கார் ஆற்றில் சிக்கியிருப்பதைப் பார்த்து மனம் மாறிய இளைஞர் அந்தக் காரை உள்ளூர்க்காரர்கள் உதவியுடன் வெளியே எடுக்க முயன்றுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தண்ணீருக்குள் தள்ளப்பட்ட பிஎம்டபிள்யு ரக காரின் விலை ரூ.35 லட்சத்துக்கு குறையாமல் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
எது முறையான குழந்தை வளர்ப்பு?
பொதுவாகவே இந்தக் காலத்தில் பெற்றோர் இருவருமே வேலைக்குச் செல்வதால் பிள்ளைகள் கேட்பதை எல்லாம் வாங்கித் தருகின்றனர். என் இளம் பருவத்தில் நான் சிரமப்பட்டதுபோல் என் குழந்தை எதற்காகவும் சிரமப்படக்கூடாது, ஏங்கக்கூடாது என நினைக்கின்றனர். அவ்வாறு செய்வதுதான் நல்ல பெற்றோருக்கான அடையாளம் என்று பலரும் போலி பிம்பத்துக்குள் சிக்கியிருக்கின்றனர்.
உண்மையில் பிள்ளைகள் கேட்பதை எல்லாம் வாங்கித் தருவது அவர்களின் பிடிவாத குணத்தையே அதிகரிக்கும் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். கேட்பது எல்லாம் உடனே கிடைத்துவிடாது என்பதுதான் மனித வாழ்வின் யதார்த்தம். அதனால், குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே ஏமாற்றத்தையும்கூட ஏற்றுக்கொள்ள கற்றுக் கொடுக்க வேண்டும். அப்படியல்லாமல் பணம் இருக்கிறதே என்பதால் ஆடம்பரங்களை அநாவசியமாக அள்ளிக் கொடுத்தால் அது அவர்களைப் பாதிப்புக்குள் தள்ளும் என்று உளவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.