

2018ம் ஆண்டின் வெள்ள துயர நினைவுகள் மீண்டும் கேரள மக்கள் மனங்களில் பீதியைக் கிளப்பி வருகிறது. மத்திய மற்றும் வடக்கு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் இதுவரை 30 பேர் பலியாகியுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கனமழையினால் தாழ்வான பகுதிகள் வெள்ளக்காடாக மாற மலைப்பிரதேசங்களில் கடும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. வயநாட்டில் மேப்படி அருகே புதுமலாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் எஸ்டேட் தொழிலாளர்கள் 30 பேர் மாயமாகியுள்ளதாக அஞ்சப்படுகிறது.
மலப்புரம் மாவட்டத்தின் நிலம்பூர் அருகே கவலப்பரா பகுதியில் பெரிய அளவில் மீட்புப் படையினர் நிலச்சரிவில் காணாமல் போனவர்களைத் தேடி வருகின்றனர். நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்களின் உடல்களை மீட்கப்போராடி வருகிறது மீட்புக் குழு.
மாலை 4.30 மணி வரை நிலச்சரிவின் மிகப்பெரிய சேற்றுக் குவியலிலிருந்து 3 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. சுமார் 50 பேர் உயிரோடு நிலச்சரிவில் சிக்கி உயிரோடு புதையுண்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையை அதற்குள் அறுதியிட முடியாது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தேசியப் பேரிடர் மேலாண்மையின் குழு ஒன்று மாநில மீட்புக்குழுவுடன் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கவலப்பராவுக்கு இன்னும் கூடுதல் தேசியப் பேரிடர் மேலாண்மைப் படையினர் விரைந்துள்ளனர்.
கோழிக்கோட்டில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது மீட்புப் பணிகளை தாமதப்படுத்தியுள்ளது. குக்கிராமங்களில் நெட்வொர்க் இல்லாததால் மக்கள் அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இந்நிலையில் மலப்புரம் கவலப்பரா உள்ளூர்வாசிகள் மிகப்பெரிய நிலச்சரிவில் 50 பேர் உயிரோடு புதையுண்டதாக தெரிவித்திருப்பது அங்கு கவலைகளை அதிகரித்துள்ளது.