கர்நாடகா கனமழை, வெள்ளம்; ‘ரெட் அலர்ட்’ உடுப்பியில் சனிக்கிழமையன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை
பலநாட்கள் பெய்துவரும் தொடர் மழை காரணமாக கர்நாடக மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளக்காடாகியுள்ளன. மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து சுமார் 44,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பெல்காவி மாவட்டத்தில் 6 பேர் பலியாகினர், சுமார் 40,000 பேர் வெளியேறியுள்ளனர்.
உத்தர கன்னட மாவட்டத்தில் 2 பேர் மழை வெள்ளத்திற்குப் பலியாகினர். ஷிவ்மோகாவில் ஒருவர் பலியானார். சுமார் 17,000 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கஜனூர் அணையிலிருந்து ஷிவ்மோகாவில் உள்ள துங்கா நதிக்கு இன்று காலை 9 மணி நிலவரப்படி 95,100 கன அடி நீர் வரத்து இருந்தது தற்போது 1.04 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது.
உடுப்பி மாவட்டத்தில் கன மழை பெய்து வருவதாலும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதாலும் சனிக்கிழமை, ஆகஸ்ட் 10ம் தேதி அனைத்து பள்ளிகள் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
யெதினஹல்லாவில் நிலச்சரிவு காரணமாக பெங்களூரு-மங்களூரு நெடுஞ்சாலையில் ஷீரடி பாதை வாகனங்களுக்கு மூடப்பட்டுள்ளது. நெடுஞ்சாலையில் சகதிக்குவியல் மலைபோல் குவிந்துள்ளதால் வாகனங்கள் ஆங்காங்கே தேங்கி நிற்கின்றன. மதிகேரி வழியாக மங்களூரு செல்ல இவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
குடகுவில் வீடு இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தின் 5 பேர் பலி:
பாகமண்டலாவில் கனமழையில் வீடு ஒன்று இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியானது அப்பகுதியில் பெரும் துயரத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
பாக மண்டலாவில் 24 மணி நேரத்தில் 400மிமீ மழைக் கொட்டித் தீர்த்தது.
