

புதுடெல்லி
ராகுல் காந்தி ராஜினாமா செய்தபின் டெல்லியில் நாளை நடைபெறும் காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் அக்கட்சியின் புதிய தலைவர் தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் காந்தி திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். ராகுல் காந்தியின் ராஜினாமாவைத் தொடர்ந்து ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் பல்வேறு மாநிலங்களில் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். ராகுல் காந்தியை சமாதானம் செய்யும் முயற்சிகள் தோல்வியில் முடிந்து விட்டன. புதிய தலைவர் தேர்வில் அவர் உறுதியாக உள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் தலைமை இல்லாத சூழலில் தொண்டர்கள், நிர்வாகிகள் இடையே குழப்பமான சூழல் நிலவுகிறது.
ராகுல் காந்தியைப் போன்று இளம் தலைவர் ஒருவர்தான் காங்கிரஸ் கட்சிக்குத் தலைவராக வர வேண்டும் என்று மூத்த தலைவர்கள் சிலர் குரல் எழுப்பியுள்ளனர். பிரியங்கா காந்தியைத் தலைவராக நியமிக்க வேண்டும் என பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் தலைவர் பதவிக்கு, தன்னைப் பரிசீலிக்க வேண்டாம் என பிரியங்கா கூறியுள்ளார்.
இந்த சூழலில் காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் நாளை (ஆகஸ்ட் 10-ம் தேதி) காலை 11 மணிக்கு நடத்தப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் கட்சியை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்வது குறித்தும், அடுத்த தலைவர் பற்றியும் விரிவாக விவாதிக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அகமது படேல், ஏ.கே. அந்தோணி, கே.சி. வேணுகோபால் உள்ளிட்டோர் சோனியா காந்தியை அவரது வீட்டில் சந்தித்துப் பேசினர். அப்போது காரியக் கமிட்டிக் கூட்டம் பற்றியும், அடுத்த தலைவர் குறித்தும் அவர்கள் பேசியதாகத் தெரிகிறது.
தலைவராகத் தேர்வுசெய்ய வாய்ப்பு இருப்பவர்கள் குறித்து மூத்த தலைவர்களுடன் சோனியா விரிவான ஆலோசனை நடத்தியுள்ளார். இதனிடையே கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான முகுல் வாஸ்னிக் தலைவர் பதவிக்குத் தேர்வு செய்யப்படலாம் அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.