Published : 09 Aug 2019 04:49 PM
Last Updated : 09 Aug 2019 04:49 PM

'ஒரு நாடு ஒரு ரேஷன் கார்டு': 4 மாநிலங்களுக்கு இடையே பயன்படுத்திக்கொள்ளும் திட்டம் தொடங்கியது

புதுடெல்லி,

மாநிலங்களுக்கு இடையே எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை வாங்கிக்கொள்ள உதவும் வகையில் ரேஷன் கார்டு திட்டம் தெலங்கானா, ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் இன்று தொடங்கியது.

2020-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி முதல் 'ஒருநாடு, ஒரு ரேஷன் கார்டு திட்டம்' நாடு முழுவதும் தொடங்கும் என்று மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்தார்.


தெலங்கானா, ஆந்திர மாநிலங்களுக்கு இடையிலான ரேஷன் கார்டு திட்டம் இன்று அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதன் மூலம் இரு மாநிலங்களைக் சேர்ந்த மக்கள், எந்த ரேஷன் கடையிலும்(பொதுவினியோகக் கடை) தங்களுக்கு உரிய ரேஷன் பொருட்களை வாங்கிக்கொள்ள முடியும். அதாவது ஆந்திர மாநிலத்தில் ஒருவருக்கு ரேஷன் கார்டு இருந்து, அவர் தெலங்கானாவில் வசித்தால், அவர் ரேஷன் கார்டை மாற்றத் தேவையில்லை, தெலங்கானாவில் தான் வசிக்கும் வீட்டின் அருகே இருக்கும் ரேஷன் கடையிலேயே பொருட்களை வாங்கிக்கொள்ள இந்த திட்டம் வகை செய்கிறது. இதேபோன்றுதான் மகாராஷ்டிரா, குஜராத் மாநில மக்களும் பெற்றுக்கொள்ளலாம்.


இந்த திட்டத்தை தொடங்கிவைத்து உணவுத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் கூறியதாவது:
" இன்று வரலாற்றுச் சிறப்பு மிக்கநாள். மாநிலங்களுக்கு இடையே பயன்படுத்திக்கொள்ளத் தக்கவகையில் ரேஷன் கார்டு திட்டம் 4 மாநிலங்களில் தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா-குஜராத் ஆகிய மாநிலங்களில் இந்த திட்டம் வெற்றிகரமாக நடைமுறைக்கு வந்துள்ளது.

இதுதவிர ஹரியானா, ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், திரிபுரா ஆகிய மாநிலங்களிலும் மாநிலத்துக்குள்ளேயே எந்த ரேஷன் கடையிலும் பொருட்களை வாங்கும் ரேஷன் கார்டு முறை சோதனை முயற்சியில் இருக்கிறது. 2020-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் அதிகாரபூர்வமாகத் தொடங்கும்.
இந்த திட்டத்தால் உணவுப்பொருட்களை இருப்பு வைப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஏனென்றால், இந்திய உணவுக் கழகத்தின் அனைத்து குடோன்களிலும் போதுமான அளவு உணவு தானியங்கள் இருப்பு உள்ளன, இருப்பு தீர்வதற்கு 3 மாதங்களுக்கு முன்பே அறிக்கை அளிக்கவும் கேட்கப்பட்டுள்ளது.

அனைத்து குடோன்களும் ஆன்-லைன் மூலம் இணைக்கப்பட்டுள்ளதால், தங்களிடம் இருக்கும் இருப்பு தானியங்கள், தேவைப்படும் அளவு குறித்து அறிய முடியும். மேலும் உணவுத்துறை அதிகாரிகளும் அடிக்கடி இந்த திட்டத்தை மேற்பார்வை செய்துகொள்வார்கள்" எனத் தெரிவித்தார்.

மத்திய உணவுத்துறை செயலாளர் ரவி காந்த் கூறுகையில், " ஒரு மாநிலத்தைச் சேர்ந்தவர் தான் குடியிருக்கும் வீட்டில் இருந்து வேறு நகருக்குச் சென்றால் ரேஷன் கார்டு முகவரியை மாற்றாமல், எந்த ரேஷன்கடையிலும் பொருட்களை வாங்க முடியும்.
இந்த திட்டம் படிப்படியாக வெற்றியாகி வருகிறது. 2020ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தற்போது சோதனை முயற்சியில் ஈடுபட்டு இருக்கும் 11 மாநிலங்களும், மாநிலங்களுக்கு இடையே பயன்படுத்திக்கொள்ளும் ரேஷன்கார்டு அறிமுகம் செய்யும் " எனத் தெரிவித்தார்.

தற்போது நாட்டில் 81 கோடி மக்களுக்கு 5 லட்சம் ரேஷன் கடைகளின் மூலம் மாதத்துக்கு 5 கிலோ உணவு தானியங்கள் மானியவிலையில் வழங்கப்படுகின்றன. இதற்காக மத்தியஅரசுக்கு ஆண்டுக்கு ரூ.1.4 லட்சம் கோடி செலவாகிறது.
ரேஷன் கடைகளில் அதிகபட்ச மானியமாக அரசி கிலோ ரூ.3க்கும், கோதுமை கிலோ ரூ.2க்கும், தானியங்கள் கிலோ ஒரு ரூபாய்க்கும் தேசிய உணவுப்பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x