

கவுகாத்தி,
தான் ஆசையாய் வளர்த்த இரு மரங்களை வெட்டியதைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுத சிறுமியின் வீடியோவைப் பார்த்த மணிப்பூர் முதல்வர், அந்த சிறுமியை மாநிலத்தின் பசுமைத் தூதராக நியமித்து உத்தரவிட்டார்.
"பசுமை மணிப்பூர் திட்டத்தின் தூதராக இந்த சிறுமையைக் காட்டிலும் வேறு யாரும் தகுதியானவர்கள் இல்லை" என்று கூறி அந்த சிறுமியை மாநிலத் தூதராக முதல்வர் நியமித்தார்.
மணிப்பூர் அரசின் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு இயக்குநர் பாலகிருஷ்ணா சிங், அரசாணையும் வெளியிட்டுவிட்டார்.
மணிப்பூர் மாநில தலைநகர் இம்பால் நகரில் இருந்து 48 கி.மீ தொலைவில் உள்ள காக்சிங் நகரம்.
இந்த நகரைச் சேர்ந்தவர் இளங்பம் பிரேம்குமார் சிங். இவரின் 10 வயது மகள் இளங்பம் வேலன்டினா தேவி. நகரில் உள்ள அமுடாம்பி டிவைன் லைஃப் ஆங்கிலப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார்.
வேலன்டினா தேவி 1-ம் வகுப்பு படித்த போது, தனது வீட்டுக்கு அருகே செல்லும் சிறிய ஆற்றின் அருகே இரு குல்முகர் மரக்கன்றுகளை நட்டு அதை பராமரித்தார். ஏறக்குறைய 4 ஆண்டுகளில் அந்த இரு மரக்கன்றுகளும் நன்கு வளர்ந்து பெரிய மரமாகி, அழகான சிவப்பு நிற பூக்களாகக் பூத்துக் குலுங்கத் தொடங்கியன.
இதைப் பார்த்து அந்த சிறுமி வேலன்டினா தேவியும், மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். இந்நிலையில், சாலையை அகலப்படுத்தும் பணிகள் அங்கு நடந்து வந்துள்ளன. கடந்த சனிக்கிழமை சாலையை அகலப்படுத்தும் பணிக்காக சிறுமி வேலன்டினா தேவி வளர்த்த இரு மரங்களும் அதிகாரிகள் உத்தரவின்பேரில் வெட்டப்பட்டன.
மரங்களை வெட்டவிடாமல் தடுத்து கதறி அழுத, வேலன்டினா தேவி மரங்கள் வெட்டப்பட்டபின் நீண்ட நேரம் தனது அழுகையை அடக்க முடியாமல் சாலையில் நின்று மரங்களைப் பார்த்தவாறு அழுதார். இதைப் வீடியோவாக எடுத்த ஒருவர், சமூக வலைதளங்களில் பகிர அது வைரலானது.
தான் ஆசையாய் வளர்த்த மரங்கள் வெட்டப்பட்டது தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுத சிறுமி என்று அதில் தலைப்பிட்டிருந்தார்.
இந்த வீடியோவை மணிப்பூர் மாநில முதல்வர் நாங்தாம்பம் பைரன் பார்த்துள்ளார். மரங்களை வெட்டியதற்காக கண்ணீர் விட்டு அழும் இந்த சிறுமியைக் காட்டிலும் மாநிலத்தின் மணிப்பூர் பசுமை இயக்கத்துக்கு சிறந்த தூதராக யாரையும் நியமிக்க முடியாது என்று தெரிவித்து அந்த சிறுமியை தூதராக நியமித்தார்.
மணிப்பூர் அரசு வெளியிட்ட அரசாணை (படவிளக்கம்)
இதுதொடர்பாக முதல்வர் நாங்தாம்பம் பைரன் 'தி இந்து'வுக்கு(ஆங்கிலம்) அளித்த பேட்டியில் கூறியதாவது:
தான் வளர்த்த மரங்களை வெட்டியதைப் பார்த்து அழும் அந்த சிறுமியின் வீடியோவைப் பார்த்தேன். மரங்கள் வெட்டும்போது பெரியவர்கள்கூட கவலைப்படாத போது சிறுமி அழுதது என்னை உலுக்கியது.
உடனடியாக இம்பால் மாவட்ட போலீஸ் எஸ்.பி. யெங்கோம் விக்டோரியாவை அழைத்து அந்த சிறுமி வேலன்டினா தேவியைச் சந்தித்து 20 மரக்கன்றுகளை கொடுத்து அதை நடுவதற்கு தகுந்த இடத்தையும் அளியுங்கள் என்று உத்தரவிட்டேன்.
மணிப்பூர் மாநில முதல்வர் நாங்தாம்பம் பைரன் : படம் உதவி பேஸ்புக்
ஆனால் இதுமட்டும் போதாது என்று நினைத்தேன். மாநிலத்தின் பசுமை மணிப்பூர் இயக்கத்துக்கு மரங்களை நேசிக்கும் இந்த சிறுமியைத் தவிர வேறுயாரும் பொருத்தமாக இருக்கமாட்டார்கள் என்று முடிவு செய்தேன். இந்த சிறிய வயதிலேயே மரங்கள் மீது அன்பாகவும், ஈர்ப்பாகவும் இருக்கும் இந்த சிறுமியை மாநில தூதராக நியமித்தேன்" எனத் தெரிவித்தார்.
இந்த உத்தரவையும், அந்த சிறுமி கண்ணீர் விட்டு அழும் காட்சியையும் மணிப்பூர் முதல்வர் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து மணிப்பூர் அரசு வெளியிட்ட உத்தரவில், " பசுமையை ஊக்குவிக்கும் மணிப்பூர் அரசின் அனைத்து விளம்பரங்கள், பிரச்சாரங்களிலும் இனிமேல் வேலன்டினா தேவியின் புகைப்படம்தான் பெறும். அரசு மரம் நடு விழாக்கள், விஜபிக்கள் மரம் நடுவிழாக்கள், உலக சுற்றுச்சூழல் தினம் ஆகியவற்றுக்கும் தூதராக வேலன்டினா தேவி இருப்பார்.
மணிப்பூர் அரசின் பசுமை இயக்க தூதராக ஒரு ஆண்டுக்கு வேலன்டினா தேவி நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அரசு நிர்ணயித்தப்படி ஊதியம், விழாக்களில் பங்கேற்கபோக்குவரத்துச் செலவு, உணவு தங்குமிடம் ஆகியவை அளிக்கப்படும். முதல்வரின் உத்தரவின் பெயரில் இந்த அரசாணை வெளியிடப்படுகிறது "
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.