

புதுடெல்லி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோர் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இவர்கள் இருவரையும் ஸ்ரீநகருக்குள் நுழைவதற்கு போலீஸார் அனுமதி அளிக்கவில்லை. தங்களின் கட்சியைச் சேர்ந்தவர்களைச் சந்திக்கச் செல்கிறோம் எனக் கூறியும் போலீஸார் அவர்களுக்கு அனுமதி மறுத்துவிட்டனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு சலுகைகளை மத்திய அரசு ரத்து செய்து, மாநிலத்தை இரண்டாகப் பிரித்து அறிவித்தது. இதனால் ஜம்மு காஷ்மீர் மற்றும் சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆயிரக்கணக்கில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் இருக்கிறார்கள்.
மேலும், முன்னாள் முதல்வர்களான மெகபூபா முப்தி, ஓமர் அப்துல்லா ஆகியோரும் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சூழலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோர் இன்று ஸ்ரீநகருக்குச் சென்றனர். விமான நிலையத்தில் இருவரும் இறங்கியவுடன் நகர் பகுதிக்குள் வெளியே செல்ல இருவரும் முயன்றனர்.
அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் இரு தலைவர்களையும் வெளியே செல்ல அனுமதி மறுத்துவிட்டனர். தங்கள் கட்சியின் நிர்வாகிகளை சந்திக்கச் செல்கிறோம் என்று இரு தலைவர்களும் கூறியபோதிலும் அவர்களை போலீஸார் தடுத்தனர்.
இதுகுறித்து டி.ராஜா தொலைபேசியில் பிடிஐ நிருபரிடம் பேசுகையில், "ஸ்ரீநகருக்குள் நுழையக் கூடாது என்று சட்டப்பூர்வ உத்தரவை எங்களிடம் காண்பித்தனர். பாதுகாப்புக் காரணங்களுக்காக நாங்கள் அனுமதிக்கப்படமாட்டோம் என்கிறார்கள். தொடர்ந்து போலீஸாருடன் பேசி வருகிறோம்" எனத் தெரிவித்தனர்.
இதற்கிடையே இரு தலைவர்களும் தாங்கள் ஸ்ரீநகருக்கு வருகிறோம். தேவையான பாதுகாப்பு வசதிகளும், அனுமதியும் அளிக்கக் கோரி முன்கூட்டியே ஆளுநர் சத்ய பால் மாலிக்கிற்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் இரு தலைவர்களும் தெரிவித்தனர்.
இதுகுறித்து சீதாராம் யெச்சூரி கூறுகையில், "எங்கள் வருகையை முன்கூட்டியே தெரியப்படுத்தும் வகையில் ஜம்மு காஷ்மீர் ஆளுநருக்கு கடிதம் எழுதி, எங்கள் வருகையின் போது தடை ஏதும் விதிக்காதீர்கள், குறிப்பாக தடுக்காதீர்கள் என்று கேட்டுக்கொண்டோம். எங்கள் கட்சியின் நிர்வாகிகளையும், முக்கிய நபர்களையும் சந்திக்க வந்துள்ளோம்" எனத் தெரிவி்த்தார்.
இதற்கிடையே ஸ்ரீநகருக்கு வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தும் நேற்று விமான நிலையத்திலேயே தடுக்கப்பட்டு அங்கிருந்து மீண்டும் டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிடிஐ