

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில தினங்களாகவே கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள கோலாபூர் சாங்லி உள்ளிட்ட 5 மாவட்டங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர்வாசிகள், பேரிடர் மீட்புக் குழுவினர், ராணுவம், கடற்படை, விமானப் படை என அனைவரின் முயறிசியால் 5 மாவட்டங்களைச் சேர்ந்த 1 லட்சத்து 20,000 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.
மிக மோசமான பாதிப்பைச் சந்தித்துள்ள கோலாப்பூர், சாங்லி மாவட்டங்களில் 250 கிராமங்கள் மழை, வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.
குறிப்பாக, கோலாப்பூரில் மேம்பாலங்களை மூழ்கடிக்கும் அளவுக்கு வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இப்பகுதியில் மட்டும் சுமார் 51,000 பேர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கும் பணியில் பேரிடர் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சாங்லி மாவட்டத்துக்கு கடற்படையின் 12 மீட்புக் குழுக்கள் விரைந்தன. ஆனால், மோசமான வானிலை காரணமாக வெள்ளத்தில் சிக்கியிருக்கும் மக்களை ஹெலிகாப்டர் மூலம் ஏர் லிஃப்ட் செய்து மீட்க முடியாத சூழல் நிலவுகிறது.
தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேற்கு மகாராஷ்டிராவின் 5 மாவட்டங்களில் 27 பேர் மழை வெள்ள சம்பவங்களில் பலியாகியுள்ளனர். மழைநீர் வடிய இன்னும் 2 தினங்களாவது ஆகும் என்பதால் மீட்புப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
அதேவேளையில், அடுத்த 24 மணிநேரத்திற்கு கனமழை வாய்ப்பிருப்பதாக விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை மக்கள் மத்தியில் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில் முதல்வர் பட்நவிஸ் ஹெலிகாப்டர் மூலம் கோலாபூர், சங்லி பகுதிகளை ஆய்வு செய்தார்.