

மாநில அரசுகள் முன்வைக்கும் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
பிரதமர் அலுவலக பொறுப்புகளை செவ்வாய்க் கிழமை ஏற்றுக்கொண்ட மோடி பிரதமர் அலுவலக அதிகாரி களிடையே நேற்று பேசினார். அப்போது பிரதமர் அலுவலக அமைப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைத்த மோடி, மக்களின் பிரச்சினைகளை மிக விரைந்து தீர்வு காணவேண் டியதன் அவசியத்தை வலியுறுத் தினார்.
அவர் பேசுகையில், “பிரதமர் அலுவகத்துக்கு கொண்டுவரப்படும் பிரச்சினைகள் குறித்த தொடர் நடவடிக்கை மற்றும் கண்காணிப் புக்காக நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட வேண்டும்.
பிரதமர் அலுவலகம் கடந்த பல ஆண்டுகளாக நாட்டின் மிக முக்கிய அமைப்பாக உள்ளது. இதன் சிறந்த நடைமுறைகள் தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும்.
மாநில அரசுகள் முன்வைக்கும் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்தும் விவேகத்துடனும் தீர்வு காண்பதையே நான் விரும்புகிறேன்.
மாநிலங்களின் வளர்ச்சியை பொருத்தே நாட்டின் வளர்ச்சி உள்ள தாலும், கூட்டாட்சி அமைப்பை வலுப்படுத்த உதவும் என்பதாலும் இத்தகைய அணுகுமுறை மிகவும் முக்கியம்.
மக்கள் பிரதிநிதிகள் தனிப்பட்ட முறையிலோ அல்லது நாடாளு மன்ற நடைமுறைகள் மூலமாகவோ எழுப்பும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது அவசியம். அனைவரின் கூட்டு உழைப்பின் மூலமே சிறந்த நிர்வாகத்தை அளிக்க முடியும். பிரதமர் அலுவலக அதிகாரிகள் தங்கள் கருத்துகளை தயக்கமின்றி என்னிடம் பகிர்ந்துகொள்ளலாம்” என்றார்.
புதிய அமைச்சர் பொறுப்பேற்பு
இதனிடையே பல்வேறு முக்கிய அமைச்சர்கள் தங்கள் இலாகா பொறுப்புகளை புதன்கிழமை ஏற்றுக்கொண்டனர்.
சிவசேனை கட்சியின் ஆனந்த் கீதே, பாஜகவை சேர்ந்த சுஷ்மா ஸ்வராஜ், வெங்கய்ய நாயுடு, அனந்தகுமார், உமாபாரதி, மேனகா காந்தி, ஜிதேந்திர சிங் ஆகியோர் நேற்று பொறுப்பேற்றனர்.
உரத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற அனந்தகுமார் கூறுகையில், அத்தியாவசிய மருந்துகளின் விலையை 25 முதல் 40 சதவீதம்வரை குறைப்பதற்காக மருந்து உற்பத்தி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவேன்” என்றார்.
நீர்வளத் துறை அமைச்சராக உமா பாரதி பொறுப்பேற்றார். அவர் கூறுகையில், “கங்கை நதியை தூய்மைப்படுத்துவது பிரதமர் நரேந்திர மோடியின் முன்னுரிமை திட்டங்களில் ஒன்று. இப்பணிக்கு முக்கியத்துவம் அளிப்பேன்” என்றார். அறிவியல் தொழில்நுட்பத் துறை அமைச்சராகப் பொறுப் பேற்றுக்கொண்ட ஜிதேந்திர சிங் கூறுகையில், “ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பணிகளை ஊக்குவிப்பேன்” என்றார்.
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற மேனகா காந்தி, தனது துறையில் நடைபெற்று வரும் பணிகள் தொடர்பாக அதிகாரிகளுடன் உடனே ஆலோசனை நடத்தினார்.