

இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே இயக்கப்பட்டு வரும் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் பாகிஸ்தான் அரசால் 5 மணி நேரம் வாகா எல்லையிலேயே நிறுத்திவைக்கப்பட்டது. இதனால் பழைய டெல்லி ரயில் நிலையத்துக்கு ரயில் 5 மணி நேரம் தாமதமாக வந்தடைந்தது.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், 117 பயணிகளுடன் பாகிஸ்தான் நாட்டின் அட்டாரியில் இருந்து வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் பாகிஸ்தான் அதிகாரிகள் ஏற்படுத்திய தாமதத்தால் 5 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டு இன்று அதிகாலை 6 மணியளவிலேயே பழைய டெல்லி ரயில் நிலையத்தை வந்தடைந்தது.
முன்னாதாக, நேற்றிரவு (வியாழக்கிழமை இரவு)8 மணிக்கு பாகிஸ்தானின் அட்டாரியில் இருந்து ரயில் புறப்படத் தயாராக இருந்தது. ரயிலில் 76 இந்தியர்கள், 41 பாகிஸ்தான் நாட்டவர்கள் உட்பட 117 பயணிகள் இருந்தனர். ரயில் புறப்படும் வேளையில் ரயில் சேவையை ரத்து செய்வதாக பாகிஸ்தான் அறிவித்தது.
பாகிஸ்தானின் இந்த திடீர் அறிவிப்பை இந்திய ரயில்வேயின் வடக்கு ரயில்வே நிர்வாகம் ஏற்க மறுத்தது. ஆனால், தொடர்ந்து பாகிஸ்தான் பிடிவாதம் காட்டியது. பாதுகாப்பு காரணங்களைக் குறிப்பிட்டு இந்தியாவுக்கு தனது ரயில்வே குழுவினர் அனுப்பத் தயங்குவதாகக் கூறியது. இதற்கிடையில் சில பயணிகள் ரயிலில் இருந்து இறங்கிவிட்டர். 110 பயணிகளுடன் ரயில் சுமார் 5 மணி நேரம் வாகா எல்லையிலேயே நின்றது.
பல்வேறு முயற்சிகளுக்குப் பின்னர் இந்திய தரப்பில் ரயில் இன்ஜின் ஒன்று அனுப்பப்பட்டது. அந்த இன்ஜின் மூலம் ரயில் டெல்லிக்கு கொண்டுவரப்பட்டது. 8 மணிக்கு புறப்பட வேண்டி ரயில் அதிகாலை 1 மணியளவில் அட்டாரியிலிருந்து புறப்பட்டது. காலை 6 மணியளவில் பழைய டெல்லி ரயில் நிலையத்துக்கு வந்தடைந்தது.
1976 முதல்..
சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் டெல்லி மற்றும் அட்டாரியில் இருந்து பாகிஸ்தானின் லாகூர், கராச்சி நகரங்கள் வரை இயக்கப்பட்டு வருகிறது. 1976-ம் ஆண்டு சிம்லா ஒப்பந்தத்தின்படி இருநாடுகளிடையேயான நட்பைக் குறிக்கும் வகையில் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. பிரதி வாரம் திங்கள் மற்றும் வியாழக்கிழகளில் இந்த ரயில் இயக்கப்படுவது வழக்கம்.
கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து இருநாடுகளிடையே இயக்கப்பட்டு வரும் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நிறுத்தப்படுவதாக பாகிஸ்தான் அறிவித்தது.
ஆனால், சிறிது காலத்துக்குப் பின்னர் ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. இந்நிலையில், இன்று மீண்டும் அதேபோல் ஒரு சம்பவத்தை பாகிஸ்தான் செய்துள்ளது.