

ஸ்ரீநகர்
பக்ரீத் பண்டிகையையொட்டி வெளி மாநிலங்களிலிருந்து காஷ்மீருக்கு வீடு திரும்ப முடியாமல் உள்ள மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உதவ ஹெல்ப்லைன்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு உரிமைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் காஷ்மீருக்கும் இந்தியாவின் பிற பகுதிகளுக்குமான போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் தொழிலாளர்கள் வீடு திரும்பவும், ஈத் பண்டிகை கொண்டாடுவோருக்கும் அவசரப் போக்குவரத்து ஏற்பாடுகளை காஷ்மீர் அரசு செய்துவருகிறது.
இதுகுறித்து ஸ்ரீநகர் மாவட்ட ஆட்சியர் ஷாஹித் சவுத்ரி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு பதிவுகளை ட்வீட் செய்துள்ளார்.
ட்விட்டரில் அவர் தெரிவித்துள்ளதாவது:
''காஷ்மீருக்கு வீடு திரும்ப விரும்புவோர், துணை ஆணையர் அலுவலகத்தின் 9419028242 மற்றும் 9419028251 ஆகிய இரு தொலைபேசி எண்களைத் தொடர்புகொள்ளலாம். இவற்றை பிற மாநிலங்களில் வசிக்கும் காஷ்மீரைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஈத் அன்று வீட்டிற்குச் செல்வோர் உட்பட ஏராளமான தொழிலாளர்களைக் கருத்தில் கொண்டு உதம்பூர் / ஜம்முவிலிருந்து சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதற்கான உதவி எண்: +919797532910.
வெளி மாநிலங்களில் வசிக்கும் பெண்கள் (மாணவிகள்) குழுவினர் போக்குவரத்து வசதிகள் குறித்து அறிய 9419151189 மற்றும் 9419028242 எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
பிற மாநிலங்களிலிருந்து காஷ்மீரில் உள்ள சொந்த வீடுகளுக்குச் செல்ல விரும்பும் தொழிலாளர்கள், மாணவ-மாணவிகளுக்கு தேவையான போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
நேற்று, வெளிமாநிலங்களிலிருந்து வீடு திரும்பிய காஷ்மீர்மக்கள் 1940 பேருடன் 56 பேருந்துகள் ஸ்ரீநகரிலிருந்து புறப்பட்டுச் சென்றன. இன்றும் வீடு திரும்பும் காஷ்மீர் மக்களுக்கு உதவ மேலும் பல பேருந்துகள் தயார் நிலையில் உள்ளன.
பயணிகளின் வசதிக்காக தங்குமிடம், போக்குவரத்து மற்றும் அடிப்படை வசதிகள் அடங்கிய சமுதாயக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன''.
இவ்வாறு ஷாஹித் சவுத்ரி தெரிவித்துள்ளார்.