

பெங்களூரு,
நடிகர் பிரகாஷ் ராஜ் குறித்து அவதாறு கருத்துக்களை ஃபேஸ்புக், ட்விட்டரி்ல் தெரிவித்தமைக்காக அவரிடம் பாஜகவின் மைசூரு தொகுதி எம்.பி. பிரதாப் சிம்மா வருத்தம் தெரிவித்தார்.
பாஜக எம்.பி. பிரதாப் சிம்மா வருத்தம் தெரிவித்ததையடுத்து, அதை நடிகர் பிரகாஷ் ராஜ்ஜும் ஏற்றுக்கொண்டார்
பெங்களூருவில் கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அந்த சம்பவத்தில் இருந்து மத்தியில் ஆளும் பாஜக அரசையும், பிரதமர் மோடியையும் நடிகர் பிரகாஷ் ராஜ் கடுமையாக விமர்சித்தார். நேரடியாக பிரதமர் மோடியை குறிப்பிடாமல் 'சார்' என்று அழைத்து விமர்சித்தார்.
இதனால் கர்நாடகாவில் உள்ள பாஜகவினரும் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு எதிரான நிலைப்பாட்டுடன் செயல்பட்டனர். மக்களவைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிட்ட பிரகாஷ் ராஜ் தோல்வி அடைந்தார்.
மைசூரு தொகுதி பாஜக எம்.பி. பிரதாப் சிம்மா : கோப்புப்படம் (படவிளக்கம்)
இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் குறித்து ட்விட்டர், பேஸ்புக்கில் மைசூரு தொகுதி பாஜக எம்.பி. பிரதாப் சிம்மா கடுமையான கருத்துக்களை கூறி தனிப்பட்டரீதியில் கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் 2 மற்றும் 3-ம் தேதியில் விமர்சித்திருந்தார். இது பெரும் சர்ச்சையானது.
இந்நிலையில் ட்விட்டரில் பாஜக எம்.பி. பிரதாப் சிம்மா நடிகர் பிரகாஷ் ராஜ்ஜிடம் வருத்தம் தெரிவித்து பதிவிட்டார். அதில் " அன்புள்ள பிரகாஷ் ராஜ். கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் 2,3 தேதிகளில் உங்களைப் பற்றியும் உங்கள் குடும்பத்தைப் பற்றியும் தரக்குறைவாக பேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் விமர்சித்து கருத்து பதிவிட்டிருந்தேன். இதுபோன்ற கருத்துக்கள் உங்களை பாதித்து இருக்கும், புண்படுத்தி இருக்கும் என்பதை புரிந்துகொண்டேன். என்னுடைய பதிவுகளை எந்தவிதமான நிபந்தனையும் இன்றி பேஸ்புக், ட்விட்டரில் இருந்து நீக்குகிறேன். வருத்தம் தெரிவிக்கிறேன்" எனத் தெரிவித்திருந்தார்.
பாஜக எம்.பி. பிரதாப் சிம்மா வருத்தம் தெரிவித்ததை நடிகர் பிரகாஷ் ராஜும் வரவேற்றுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில் " நன்றி பிரதாப் சிம்மா. உங்களின் மன்னிப்பை ஏற்கிறேன். சித்தாந்த ரீதியாக நமக்குள் வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால்,. தனித்தனியான துறைகளில் இருவரும் வெற்றிகரமாக இருக்கும் போது, தனிப்பட்ட ரீதியில், அவதூறான கருத்துக்களை சமூக ஊடகங்களில் பதிவிடக்கூடாது. நம்முடைய ஆளுமைதான் சிறந்த உதாரணங்கள் " எனத் தெரிவித்தார்.
பிடிஐ