

புதுடெல்லி
காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றுகிறார்.
அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவின் கீழ் காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதுபோலவே காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசமாக மாற்றும் மறுசீரமைப்பு மசோதாவும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு குடியரசு தலைவர் ஒப்புதலும் வழங்கியுள்ளார்.
இதுமட்டுமின்றி, மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு முத்தலாக் தடை மசோதா, என்ஐஏ மசோதா, மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்த சூழலில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்று வானொலி மூலம் உரையாற்றுகிறார். அப்போது, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது, லடாக்- காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது பற்றியும் பிரதமர் மோடி பேசக்கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் எதுபற்றி அவர் பேசுகிறார் என்ற விவரங்கள் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை.