

மைசூரு
கர்நாடகாவில், கபினி அணையில் இருந்து விநாடிக்கு 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுவதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவின் வடக்கு பகுதியில் பெலகாவி, பாகல்கோட்டை, யாத்கிரி மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால்
அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பிக்கொண்டு இருக்கின்றன. கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
மகாராஷ்டிராவின் தென் பகுதியிலும் கனமழை பெய்து வருவதால் கோதாவரி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த தண்ணீரும் கர்நாடகாவுக்கு வருவதால் கர்நாடகாவில் உள்ள ஆறுகளில் அதிக அளவு வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது.
கனமழை-வெள்ளத்தால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 84 அடி உயரம் கொண்ட கபினி அணையில் நீர்மட்டம் 81 அடியை தாண்டி உயர்ந்து வருகிறது. அணைக்கு விநாடிக்கு 50 ஆயிரத்துக்கும் அதிகமான கனஅடி வந்து கொண்டு இருக்கிறது.
அணையில் இருந்து 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் தற்போது 86.9 அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 124 அடி ஆகும். ஹேமாவதி அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீர், கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு வந்துகொண்டிருக்கிறது.
கிருஷ்ணராஜ சாகர் அணை முழுகொள்ளளவை எட்டிய பிறகு, அங்கிருந்து காவிரியில் நீர் திறக்கப்படும் எனத் தெரிகிறது.