ஜம்மு காஷ்மீர் விவகாரம்: ஐ.நா.வால் குடியரசு தலைவர் உத்தரவை ரத்துசெய்ய முடியுமா? மனுதாரரிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read

புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு உரிமைகளை திரும்பப் பெற்ற குடியரசுத் தலைவரின் உத்தரவுக்கு எதிரான மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு உரிமைகள், தனி அந்தஸ்துகள் வழங்கப்பட்டு இருந்த அரசமைப்புச்சட்டம் 370 பிரிவில் மத்திய அரசு திருத்தம் செய்து நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்த மசோதா கொண்டு வந்து நிறைவேற்றியது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. லடாக் பகுதி யூனியன் பிரதேசமாகவும், ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை உள்ள யூனியன் பிரதேசமாகவும் மத்திய அரசு அறிவித்தது. இதுதொடர்பாக குடியரசுத் தலைவரும் உத்தரவு பிறப்பித்து, 370 பிரிவு திருத்தப்பட்டதாகவும், இந்திய அரசமைப்புச் சட்டம் காஷ்மீர் மாநிலத்துக்கு செல்லுபடியாகும் என்று அறிவித்தார்.

குடியரசு தலைவர் பிறப்பித்த அரசமைப்புச்சட்டம் 370 பிரிவு தொடர்பான உத்தரவுக்கு எதிராக வழக்கறிஞர் மனோகர் லால் சர்மா உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில் குடியரசு தலைவர் பிறப்பித்த உத்தரவு அரசமைப்புச் சட்டத்தின் புனித உணர்வுக்கு மாறாக இருக்கிறது, அரசின் உத்தரவு தன்னிச்சையாகவும், சட்டத்துக்கு புறம்பாகவும் இருக்கிறது என்று தெரிவித்திருந்தார்.

குடியரசு தலைவரின் உத்தரவு சட்டவிரோதமானது, மத்திய அரசு நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படையில் சென்றிருக்க வேண்டும். ஜம்மு காஷ்மீரின் சட்டப்பேரவையை கூட்டாமல் பிறப்பித்த இந்த உத்தரவு செல்லாது. இந்த நாட்டு மக்களின் நலன் மற்றும் சுதந்திரத்தை காப்பாற்றும் வகையில் எனது இந்த மனுவை தாக்கல் செய்கிறேன். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்”. என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை அவசர வழக்காக விசாரிக்க எம்.எல்.சர்மா கோரினார். அதற்கு நீதிபதி என்.வி.ரமணா, இந்த மனு வரும் 12 அல்லது 13-ம் தேதி விசாரணைக்கு எடுக்கப்படும். இந்த மனுவை உரிய அமர்வுக்கு மாற்றப்படும், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் அமர்வுக்கு மாற்றப்பட்டு அவர் இந்த மனுவை விசாரிப்பது குறித்து முடிவு செய்வார் எனத் தெரிவித்தார்.

நீங்கள் தாக்கல் செய்த இந்த மனுமூலம் குறைகளை தீர்த்துவிடுவீர்களா? என்று நீதிபதிகள் அமர்வு கேள்வி எழுப்பியது. அதற்கு வழக்கறிஞர் சர்மா, இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும், ஏனென்றால், பாகிஸ்தான் அரசும், காஷ்மீரைச் சேர்ந்த மக்கள் சிலரும், குடியரசுதலைவர் பிறப்பித்த அரசமைப்புச்சட்டம் 370 பிரிவு உத்தரவுக்கு எதிராக ஐ.நா.வில் முறையிடப் போகிறார்கள்". எனத் தெரிவித்தார்.

அதற்கு நீதிபதிகள், "ஐ.நா.வுக்கு சென்றால், இந்தியாவின் அரசமைப்புச்சட்டத் திருத்தத்தை ஐ.நா.வால் நிறுத்திவைக்க முடியுமா?”, எனக் கேள்வி எழுப்பினர், “இந்த வழக்கில் வாதிடுவதற்கு உங்களின் சக்தியை, திறனை இருப்பு வைத்துக்கொள்ளுங்கள்". எனத் தெரிவித்து அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க மறுத்து வழக்கை ஒத்தி வைத்தனர்.


பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in