

புதுடெல்லி
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், இது தொடர்பான 370-வது பிரிவு சட்ட நுணுக்கப்படி பார்த்தால் இன்னும் ரத்து செய்யப்படவில்லை. மாறாக, சில சட்டத் திருத்தங்கள் மூலம் அதை செயலிழக்கும் வகையில் குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையி லான மத்திய அரசு குடியரசுத் தலைவர் உத்தரவின் மூலம், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து வரலாறு படைத்துள்ளது. இது தொடர்பாக, அரசமைப்பு (காஷ்மீருக்கு பொருந்தும்) உத்தரவு, 2019 என்ற பெயரில் பிறப் பிக்கப்பட்ட ஒரு பக்க உத்தரவில், சில சட்டத் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் அரசியலமைப்பு சட்டத்தின் 35ஏ மற்றும் 370-வது பிரிவுகளை செயலிழக்க வகை செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த 2 பிரிவுகளும் ரத்து செய்யப்படுவது பற்றி இந்த உத்தரவில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
35ஏ காஷ்மீர் மாநிலத்தின் நிரந்தர குடிமகன் யார் என்பதை தீர்மானிக்கும் உரிமையை அந்த மாநிலத்துக்கு வழங்கியது. இந்தப் பிரிவு (திருத்த மாக) நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்று அரசமைப்பு சட்டத்தில் சேர்க்கப்படவில்லை. 370-வது பிரிவு குடியரசுத் தலைவருக்கு வழங்கியுள்ள அதிகாரத்தின்படி, ஒரு உத்தரவு மூலம் சேர்க்கப்பட்டது. இந்த அடிப்படையில் தான் இந்தப் பிரிவு குடியரசுத் தலைவர் உத்தரவு மூலம் இப்போது செயலற்றதாக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக, இந்திய அரசிய லமைப்பு சட்டத்தின் அனைத்து அம்சங் களும் காஷ்மீருக்கு அப்படியே செல்லு படியாகாது என 370-வது பிரிவு கூறு கிறது. அதாவது நாடாளுமன்றத்தால் இயற்றப்படும் சட்டங்கள் மற்றும் திருத் தங்கள் அனைத்தும், காஷ்மீர் சட்டப் பேரவையின் ஒப்புதலைப் பெற்றால் மட்டுமே அங்கு செல்லுபடியாகும் என இந்தப் பிரிவு தெரிவித்தது.
சட்ட நுணுக்கப்படி பார்த்தால் 370-வது பிரிவு இன்னும் ரத்து செய்யப் படவில்லை. இந்தப் பிரிவு இன்னும் அரசியலமைப்பு சட்டத்தில் இடம் பெற்றுள்ளது. விரைவில் இது ரத்து செய்யப்படும்.
குடியரசுத் தலைவர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
அரசமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவு, உட்பிரிவு (1)-ன்படி, காஷ்மீர் மாநில அரசின் ஒப்புதலுடன் குடியரசுத் தலைவ ருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
1. (1) இந்த உத்தரவு அரசமைப்பு (காஷ்மீருக்கு பொருந்தும்) உத்தரவு, 2019 என அழைக்கப்படும்.
(2) இது உடனடியாக அமலுக்கு வரு கிறது. கடந்த 1954-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டு அவ்வப்போது மாற்றம் செய்யப்பட்ட அரசமைப்பு (காஷ்மீருக்கு பொருந்தும்) உத்தரவுக்கு மாற்றாக இந்த உத்தரவு இருக்கும். (1954-ல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தானாக ரத்தாகிவிடும்).
2. அரசமைப்பு சட்டத்தின் அனைத்து பிரிவுகள், அவ்வப்போது மேற்கொள்ளப் பட்ட திருத்தங்கள் அனைத்தும் இனி காஷ்மீருக்கும் பொருந்தும். அதற்காக அரசமைப்பு சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.
367 (4)-வது பிரிவில் கீழ்க்கண்ட அம்சங்கள் சேர்க்கப்படும்:
a. அரசமைப்பு சட்டத்தின் அனைத்து விதிகளும், பிரிவுகளும், சட்டத் திருத்தங்களும் காஷ்மீருக்கு பொருந் தும்.
b. காஷ்மீர் தொடர்பாக முடிவுகளை மேற்கொள்ள, இதுவரை அந்த மாநில சட்டப்பேரவை மற்றும் அமைச்சரவை யின் ஆலோசனையை குடியரசுத் தலைவர் கோரினார். இனி அம்மாநில ஆளுநரிடம் ஆலோசனை கோருவார்.
c. மாநில ஆளுநர் காஷ்மீர் அரசாக கருதப்படுவார்.
d. அந்த மாநிலத்துக்கான தனி அரசியல் சாசன நிர்ணய சபை, இனிமேல் அந்த மாநிலத்துக்கான சட்டப்பேரவையாகக் கருதப்படும்.
இவ்வாறு குடியரசுத் தலைவர் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
விரைவில் 370-வது பிரிவு நீக்கம்
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவானது, தற்காலிகமான, மாற்றத்தக்க மற்றும் சிறப்பு ஏற்பாடாக’ என்ற தலைப்பின் கீழ் அரசியல் சாசன சட்டத்தின் 21-வது பகுதியாக சேர்க்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் அரசியல் சாசன நிர்ணய சபை உருவாக்கப்பட்டு, அம்மாநிலத்துக்கான சட்டங்கள் இயற்ற இது வகை செய்கிறது. அதன்பிறகு இந்த சபை கலைக்கப்படுவதற்கு முன்பாக 370-வது பிரிவை நீக்குவது குறித்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது. ஆனால், சட்டம் இயற்றப்பட்ட பிறகு காஷ்மீர் அரசியல் சாசன நிர்ணய சபை கலைக்கப்பட்டபோது, 370-வது பிரிவை நீக்கலாம் என பரிந்துரை செய்யவில்லை. இதனால் இந்தப் பிரிவு நிரந்தரமாகவே இருந்து வந்தது.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் பிறப்பித்துள்ள புதிய உத்தரவின்படி, 367-(4)-வது பிரிவில் d உட்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இதில் காஷ்மீர் அரசியல் சாசன சபை, இனி காஷ்மீர் சட்டப்பேரவை என அழைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, காஷ்மீர் யூனியன் பிரதேசமாக உள்ளதால் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் வந்துவிடும். இதன்படி, காஷ்மீர் சட்டப்பேரவையின் ஒப்புதலுடன் 370-வது பிரிவை நீக்குவது குறித்து இனி குடியரசுத் தலைவரே முடிவு செய்யலாம். எனவே, இந்தப் பிரிவு விரைவில் நிரந்தரமாக ரத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செல்லுமா... செல்லாதா?
பொதுவாக, அரசியலமைப்பு சட்டத்தில் எந்த மாற்றம் செய்வதாக இருந்தாலும், அதை சட்டத் திருத்த மசோதாவாக நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தி, நான்கில் மூன்று உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெற வேண்டும்.
அதிலும் குறிப்பாக, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டுமானால் அம்மாநில சட்டப்பேரவையின் அனுமதியை முதலில் பெறவேண்டும். அப்படி சட்டப்பேரவையின் அனுமதி பெறாமல் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது சட்டவிரோதமானது என்று சிலர் கூறுகின்றனர். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் போவதாகவும் கூறுகின்றனர்.
ஆனால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவில் சொல்லப்பட்டுள்ள ஒரு அம்சத்தின் அடிப்படையிலேயே காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்திருப்பதுதான் வேடிக்கை. இதிலிருந்தே இந்தப் பிரிவு இன்னும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை உணர முடியும். இந்த விவகாரத்தில் சட்டப்படியே அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறுகிறது. எனவே, இந்த நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தால் அது செல்லுமா, செல்லாதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.