

புதுடெல்லி
சுஷ்மா ஸ்வராஜுடன் நெருக்கமான நட்பைக் கொண்டிருந்ததாகவும், அவரது மறைவினை மிகப்பெரிய இழப்பாக உணர்வதாகவும் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
மறைந்த சுஷ்மா ஸ்வராஜின் உடலுக்கு சோனியா காந்தியும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் நேற்று அஞ்சலி செலுத்தினர்.
இதற்கிடையே, சுஷ்மாவின் கணவரான ஸ்வராஜ் கவுசலுக்கு சோனியா காந்தி கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
அரசியல் மற்றும் கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு, தனது இயற்கையான நட்புணர்வால் எனது அன்பையும், மதிப்பையும் வென்றெடுத்தவர் சுஷ்மா ஸ்வராஜ். அவருடன் மிக நெருக்கமான நட்பினை நான் கொண்டிருந்தேன். அவரது மறைவினை, தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய இழப்பாகவே உணர்கிறேன்.
தனது அசாத்திய துணிச்சல், அர்ப்பணிப்புணர்வு, மன உறுதி ஆகியவற்றால் தாம் வகித்த எல்லா பொறுப்புகளிலும் சிறப்பாகவும், திறம்படவும் சுஷ்மா செயல்பட்டார்.
குறிப்பாக, வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தபோது, அவர் ஆற்றிய பணிகள் மிக அற்புதமானவை. சாமானிய மனிதனும் தன்னை எளிதில் அணுகக்கூடிய கட்டமைப்பை அவர் உருவாக்கியது உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய விஷயமாகும். உலகின் எந்த மூலையில், யார் இன்னலுக்கு உள்ளானாலும் அவர்களை பெரும் சிரத்தை எடுத்து மீட்டவர் சுஷ்மா.
இந்த சோகமான தருணத்தில், அவரது குடும்பத்தினருக்கு எனது ஆறுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பு வழங்கிய நிறைவான வாழ்க்கையை அவர் வாழ்ந்தார் என்ற உண்மையிலிருந்து சுஷ்மாவின் குடும்பத்தினர் ஆறுதல் தேடிக் கொள்ள முடியும் என நம்புகிறேன். இவ்வாறு அந்தக் கடிதத்தில் சோனியா கூறியுள்ளார்.
தனிப்பட்ட வாழ்க்கையில் நெருக்க மாக நட்பு பாராட்டிய சோனியாவும், சுஷ்மாவும் அரசியல் களத்தில் கடுமையான எதிரிகளாகவே வலம் வந்தனர். நாடாளுமன்றத்தில் அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்து கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
அதேபோல், 2004 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியமைக்க தயாரானது. அப்போது, சோனியா காந்தி பிரதமராக பதவியேற்பார் என ஊகத் தகவல்கள் வெளியாகின. இதனை கடுமையாக எதிர்த்த சுஷ்மா ஸ்வராஜ், வெளிநாட்டவரான சோனியா காந்தி, இந்தியாவின் பிரதமராக பதவியேற்றால், தனது தலையை மொட்டை அடித்துக் கொள்வதாக தெரிவித்திருந்தார்.