

“இந்திய அரசியலின் மேன்மை பொருந்திய அத்தியாயம் முடிவுக்கு வந்தது” என்று சுஷ்மா ஸ்வராஜ் மறைவுக்கு தனது அஞ்சலியில் பிரதமர் மோடி தெரிவித்தார். இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜுக்கு நேற்றிரவு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பினால் அவர் உயிர் பிரிந்தது.
சுஷ்மா ஸ்வராஜ் உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் பாஜக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த சுஷ்மா சுவராஜ் உடலுக்கு பாஜக தொண்டர்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அவரது உடல் ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டு டெல்லி லோதி சாலையில் உள்ள மயானத்தில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. ஊர்வலத்தில் முக்கிய தலைவர்கள் கார்களும் பின் சென்றன. பின்பு துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் சுஷ்மா ஸ்வராஜின் உடல் தகனம் செய்யப்பட்டது.
சுஷ்மா ஸ்வராஜின் இறுதிச் சடங்குகளை அவரது மகள் பன்சூரி செய்தார். பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மூத்த தலைவர் எல்.கே.அத்வானி ஆகியோர் இறுதி நிகழ்வுகளில் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர்.
அயல்நாட்டு வாழ் இந்தியர்களுக்காக பாடுபட்ட வகையில் சுஷ்மா ஸ்வராஜுக்கு அயல்நாட்டு வாழ் இந்தியர்கள் பலரும் தங்களது கண்ணீர் அஞ்சலியைச் செலுத்தினர்.
இந்தியாவின் விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்களும் சுஷ்மாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர், கோலி தன் ட்விட்டர் பக்கத்தில், “சுஷ்மாஜியின் மறைவினால் துயரமடைகிறேன். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு , “என்னிடம் வார்த்தைகள் இல்லை. இந்தியத் தாய்நாட்டுக்காக வாழ்ந்தார். எங்களது இதயங்களிலும் மனங்களிலும் நீடுடி நீங்கள் வாழ்வீர்கள்” என்று கூறினார். ராஜ்யவர்தன் சிங் ராத்தோர், கவுதம் கம்பீர், விரேந்திர சேவாக், டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்ஸா, ஆகியோரும் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.