

பெல்லாரி,
தென்னிந்திய மொழிகள் அழகானவை. அவற்றை கற்றுக்கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்ட தொண்டருக்கு கடந்த ஆண்டு ஒரு வீடியோவைப் பதிவிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்.
இந்தி மொழி பேசும் ஹரியாணாவின் அம்பாலா கண்டோன்மென்ட் பகுதியில் பிறந்த சுஷ்மா ஸ்வராஜ் எவ்வாறு அழகாக கன்னடத்தில் பேசுகிறார் என்று அந்த வீடியோவைப் பார்த்த தொண்டர் மிரண்டுவிட்டார். அந்த அளவுக்கு கர்நாடக மக்கள் பாராட்டும் அளவுக்கு சுஷ்மா கன்னடத்தில் பேசக் கற்றிருந்தார்.
1999-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் கர்நாடக மாநிலம் பெல்லாரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சோனியா காந்தியை எதிர்த்து பாஜக சார்பில் சுஷ்மா ஸ்வராஜ் களமிறங்கினார். இத்தேர்தலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் சுஷ்மா ஸ்வராஜ் தோற்றாலும் அவரின் தன்னம்பிக்கை பேச்சு அனைவராலும் பாராட்டப்பட்டது.
போர்க்களத்தில் தோற்றிருப்பேன், போரில் நான் வெற்றி பெற்றுவிட்டேன் என்று சோனியா காந்தியை பிரதமராக்க விடாமல் அவர் காட்டிய எதிர்ப்பு பாஜக தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் 100 கோடி மக்களை ஆளக்கூடாது என்று கடைசிவரை சோனியா பிரதமராக வருவதற்கு சுஷ்மா ஸ்வராஜ் கடுமையாக எதிர்த்தார்.
கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக சுஷ்மா ஸ்வராஜ் இருந்தார். அப்போது ட்விட்டரில் சுஷ்மாவைப் பின்தொடரும் முஷாஹித் கான் என்பவர் ஒரு கோரிக்கை விடுத்திருந்தார்.
தென்னிந்திய மொழிகள் மிகவும் அழகானவை. அவற்றைக் கற்றுக்கொள்ளலாமே சுஷ்மாஜி, கற்க வாருங்கள் என்று அந்த நபர் கேட்டிருந்தார்.
அவருக்குப் பதில் அளித்து சுஷ்மா ஸ்வராஜ் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் 1999-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தான் கன்னடத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய வீடியோவை வெளியிட்டார். 4 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த வீடியோவில் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் சிறிது நேரம் பேச, மீதமுள்ள நேரத்தில் சுஷ்மா ஸ்வராஜ் தெளிவான கன்னடத்தில் பேசி அனைத்துத் தரப்பு மக்களின் கரகோஷத்தையும், மனதையும் கவர்ந்துவிடுவார்.
இந்த வீடியோவை வெளியிட்டு சுஷ்மா ஸ்வராஜ் ட்வி்ட்டரில் கூறுகையில், " இந்தியாவின் அனைத்து மொழிகளையும் நினைத்து நான் பெருமைப்படுகிறேன். சில மொழிகளையும் என்னால் தெளிவாகப் பேச முடியும் " எனப் பதிவிட்டு வீடியோவை இணைத்திருந்தார்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்த மக்களவைத் தேர்தலில் தோற்றபோதிலும் பெல்லாரியுடனான உறவை சுஷ்மா அப்படியே விட்டுவடவில்லை. பெல்லாரியில் நடக்கும் வரமகாலட்சுமி திருவிழாவுக்கு அதன்பின் தொடர்ந்து 11 ஆண்டுகள் வருகை தந்தார்.
அத்திருவிழா பெல்லாரியில் உள்ள பி.கே.ஸ்ரீனிவாஸ மூர்த்தியின் இல்லத்தில்தான் பூஜைகள் நடக்கும். அப்போது மிகப்பெரிய அளவில் இலவசத் திருமணங்கள் நடத்தி வைக்கப்படும்.
ஆனால், 2011-ம் ஆண்டு பாஜகவின் ஜனார்த்தன ரெட்டி சுரங்க ஊழல் வழக்கில் சிக்கி சிறை சென்றபின் அங்கு செல்வதை சுஷ்மா தவிர்த்தார்.