

டெல்லி
மறைந்த பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜின் உடல், முழு அரசு மரியாதையுடன் டெல்லியில் இன்று தகனம் செய்யப்பட்டது.
பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அதன்பிறகும் அவர் வெளியுறவுத் துறை அமைச்சராக துடிப்புடன் பணியாற்றினார். ஆனால், உடல்நிலையைக் கருத்தில் கொண்டு 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அவர் போட்டியிடவில்லை.
இந்நிலையில், நேற்றிரவு சுஷ்மாவுக்கு மீண்டும் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் உடனடியாக அவரைச் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் சுஷ்மாவுக்குத் தீவிர சிகிச்சை அளித்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்று எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சுஷ்மா ஸ்வராஜ் உடலுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த சுஷ்மா ஸ்வராஜ் உடலுக்கு பாஜக தொண்டர்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டு டெல்லி லோதி சாலையில் உள்ள மயானத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
(சுஷ்மா ஸ்வராஜ் உடலுக்கு இறுதிச்சடங்கு நடந்த இடத்தில் அத்வானியை கைத்தாங்கலாக அழைத்து வந்த பிரதமர் மோடி)
துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. சுஷ்மா ஸ்வராஜின் கணவர், மகள் ஆகியோர் இறுதிச்சடங்கில் பங்கேற்றனர். அதுபோலவே பிரதமர் மோடி, முன்னாள் துணை பிரதமர் அத்வானி உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்களும், பல்வேறு கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றனர்.