Published : 07 Aug 2019 03:55 PM
Last Updated : 07 Aug 2019 03:55 PM

நேற்றிரவுதான் பேசினேன்; ஒரு ரூபாய் கட்டணத்தை வாங்க வரச்சொன்னார்: வருத்தம் தெரிவிக்கும் வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே

குல்பூஷண் ஜாதவ் வழக்கில் பணியாற்றியதற்காக 1 ரூபாய் கட்டணத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு என்னிடம் தொலைபேசியில் கூறியவர் அடுத்த 10 நிமிடங்களில் காலமானார் என்ற செய்தி என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது எனக் கூறியுள்ளார் மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே.

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ் (49). உளவு பார்த்ததாகக் கூறி, 2016-ம் ஆண்டு பாகிஸ்தான் அரசு அவரை கைது செய்தது. அவர் மீதான வழக்கை அவசரமாக விசாரித்த பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

ஆனால், கடற்படையில் இருந்து ஓய்வு பெற்ற ஜாதவ், ஈரானில் வர்த்தகம் செய்துவந்த நிலையில் அவர் பாகிஸ்தானால் கடத்தப்பட்டார் என்று இந்தியா குற்றம்சாட்டியது.

மேலும் குல்பூஷணுக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை எதிர்த்து நெதர்லாந்தில் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சர்வதேச நீதிமன்றம், குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்த வழக்கில் ஜாதவுக்காக வாதாடிய ஹரிஷ் சால்வே, தனக்கு சம்பளமாக வெறும் ரூபாய் 1-ஐ அடையாளத் தொகையாகக் கோரியிருந்தார். அவரை இந்திய அரசு நியமித்தபோது சுஷ்மா ஸ்வராஜ் வெளியுறவு அமைச்சராக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றிரவு 8.45 மணியளவில் ஹரிஷ் சால்வே தொலைபேசியில் சுஷ்மாவுடன் பேசியிருக்கிறார். அடுத்த சில மணி நேரங்களில் அவர் மறைவுச் செய்தி வெளியானது.

இது குறித்து ஆழ்ந்த வருத்தத்துடன் பேசியுள்ள ஹரிஷ் சால்வே, "சுஷ்மா ஸ்வராஜ் எனது சகோதரி போன்றவர். ஜாதவ் வழக்கில் அவர் எடுத்த முயற்சிகள் அளப்பரியது. அவர் பதவிக்காலத்தில் அவரின் பார்வைக்குச் செல்லாமல் ஜாதவ் வழக்கு தொடர்பாக ஒரே ஒரு தாள்கூட வெளியே செல்ல முடியாது. அந்த வழக்கில் ஆஜரானதற்காக நான் கோரியிருந்த 1 ரூபாய் கட்டணத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறினார். அடுத்த சில மணி நேரங்களில் அவரது மறைவுச் செய்தி வந்தது. என்னால் அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை. பொது வாழ்வில் பெரிய வெற்றிடத்தை அவரது மறைவு ஏற்படுத்தியிருக்கிறது" என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x