

டெல்லி
எட்டு வழிச்சாலை திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்தும் தமிழக அரசின் ஆணையை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. தொடர் விசாரணையில் இன்று மத்திய அரசின் கோரிக்கையை அமர்வு நிராகரித்தது.
சென்னை -சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இதை எதிர்த்து திட்ட மேலாண்மை இயக்குனர் கடந்த மே இறுதி வாரத்தில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரமணா, சந்தான கவுடர், அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய 3 பேர் அமர்வு முன் நடந்து வருகிறது.
இதற்கு முன் நடந்த விசாரணையில் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கான அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்பே எப்படி நிலத்தை வாங்கினீர்கள்? என்று கேள்வி எழுப்பியிருந்தது.
சாலை திட்டத்திற்கு நிலத்தை வாங்கிய விவகாரத்தில் நிறைய தவறுகள் நிகழ்ந்து இருப்பதை ச் சுட்டிக்காட்டி, அது குறித்து பதிலளிக்க எதிர்மனு தாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. பின்னர் மீண்டும் வழக்கு கடந்த ஜூலையில் விசாரணைக்கு வந்தது.
அன்று நடந்த விசாரணையில், “உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த அனைவரையும் இந்த மேல்முறையீட்டு வழக்கில் எதிர்மனுதாரராகச் சேர்க்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டோம். ஆனால் அதை நீங்கள் சேர்க்கவில்லை . எனவே அனைவரையும் எதிர்மனுதாரராகச் சேர்க்க வேண்டும்” என மத்திய அரசுக்கு மீண்டும் அமர்வு உத்தரவிட்டது.
“புதிதாக நிலத்தைக் கையகப்படுத்தி தேசிய நெடுஞ்சாலை என அறிவிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை. அது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. எனவே இந்த திட்டத்தையே ரத்து செய்ய வேண்டும்” எனக் கோரி சேலத்தைச் சேர்ந்த யுவராஜ் என்பவர் தாக்கல் செய்த மனுவுக்கும் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் அமர்வு, இந்த அனைத்து மனுக்களையும் ஒன்றாக ஆகஸ்ட் 7-ம் தேதி விசாரிப்பதாக கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.
இந்நிலையில் வழக்கு இன்று நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு சார்பில், “மத்திய சுற்றுச்சூழல் துறையில் இருந்து இந்திட்டத்திற்கான அனுமதி கிடைக்கும் வரை சாலை அமைப்பது போன்ற எந்த ஒரு கட்டுமான பணிகளையும் மேற்கொள்ள மாட்டோம்”. என தெரிவிக்கப்பட்டது.
“அப்படி என்றால் இந்த நீதிமன்றத்திடம் இருந்து என்ன எதிர்பார்க்கின்றீர்கள், வழக்கை இறுதி விசாரணைக்காக ஒரு தேதியை குறித்து விசாரணை நடத்த விரும்புகிறோம், இந்த வழக்கில் தங்கள் தரப்பு தாக்கல் செய்த மனுவில் சில தவறுகள் உள்ளன அதை சரி செய்து தாக்கல் செய்யுங்கள்” என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, எதிர்மனுதாரர்களுக்கு உரிய வகையில் மனு தொடர்பான தகவல்கள் ஆவணங்கள் கொடுக்கப்படாததால், அதனை சரியாக கொடுக்க உத்தரவிடகோரி எதிர்மனுதாரர்களான விவசாயிகள், நில உரிமையாளர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதுவரை விசாரணையை ஒத்திவைக்குமாறும் கோரிக்கை வைக்கப்பட்டது.
அப்போது மத்திய அரசு சார்பில், வழக்கை ஒத்திவைக்க எதிர்ப்பு தெரிவித்து, இடைக்காலமாக சர்வே போன்ற பணிகளை மேற்கோள்ள வசதியாக இடைக்கால தடையை நீக்க வேண்டும் என அனுமதி கோரப்பட்டது. மத்திய அரசு வைத்த கோரிக்கையை நிராகரித்த அமர்வு, வழக்கை ஆகஸ்ட் 22-க்கு ஒத்திவைத்தது.