

புதுடெல்லி
காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் தீர்மானம் மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். உடனடியாக இது மத்திய அரசின் அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.
காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் தீர்மானம் மாநிலங்களவையில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது. அதுபோலவே ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்க வகை செய்யும் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவும் நிறைவேற்றப்பட்டன. இதன்படி சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீரும், சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக்கும் இருக்கும்.
காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் தீர்மானமும், காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவும் மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டன. இதற்கு பாஜக கூட்டணி மட்டுமல்லாமல் பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு தெரிவித்ததால் வாக்கெடுப்பில் அரசுக்கு அபரிமிதமான ஆதரவு கிடைத்தது.
காஷ்மீர் தீர்மானமும், மசோதாவும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து இதற்கு ஒப்புதல் தெரிவித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். குடியரசுத் தலைவரின் இந்த அறிவிப்பு உடனடியாக மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.