காங்கிரஸ் எங்களை கல்வி அகதிகளாக வைத்திருந்தது: ஒரே உரையில் தேசிய கவனம் ஈர்த்த லடாக் எம்.பி.யின் ஆவேசக் கருத்து

காங்கிரஸ் எங்களை கல்வி அகதிகளாக வைத்திருந்தது: ஒரே உரையில் தேசிய கவனம் ஈர்த்த லடாக் எம்.பி.யின் ஆவேசக் கருத்து
Updated on
2 min read

காங்கிரஸ் கட்சி தங்களை கல்வி அகதிகளாக வைத்திருந்ததாக கடுமையாகச் சாடியிருக்கிறார் லடாக் எம்.பி. ஜாம்யாங் நாம்ஜியால்.

காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் விமர்சித்துப் பேசிக் கொண்டிருந்தபோது, அவையில் காரசாரமாகப் பேசி எல்லோரது கவனத்தையும் ஈர்த்தவர்தான் இந்த ஜாம்யாங் நம்ஜியால்.

மக்களவையில் நேற்று திமுக, காங்கிரஸ் எம்.பி.க்களைப் பார்த்து, "உங்களுக்கெல்லாம் லடாக் பற்றி என்ன தெரியும்? நீங்கள் யாரும் அங்கு வந்ததேயில்லை. லடாக்கில் கல்வி நிலையங்கள் இல்லை, மருத்துவமனைகள் இல்லை. அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லை. லடாக்கை யாரும் கண்டுகொண்டதே இல்லை. நாங்கள் அனுபவித்த வலி எங்களுக்கு மட்டுமே தெரியும். லடாக் இதுவரை வளர்ச்சி காணாமல் இருந்ததற்கு சட்டப்பிரிவு 370 மற்றும் காங்கிரஸ் கட்சியுமே காரணம். மத்திய அரசின் இந்த அறிவிப்பை லடாக் மக்கள் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்" என்று பேசினார் 34 வயது இளைஞரான ஜாம்யாங்.

ஒட்டுமொத்த அவையுமே அந்த இளைஞரின் பேச்சைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தது. அந்த இளைஞரின் பேச்சுக்கு பிரதமர் மோடியே பாராட்டு தெரிவித்தார்.

ட்விட்டரில் எனது இளைய நண்பர் என்று குறிப்பிட்டு ஒட்டுமொத்த லடாக் சகோதர, சகோதரிகளின் குரலாக ஜாம்யாங் ஒலித்ததாக பிரதமர் பாராட்டியிருந்தார்.

ஒரே உரையில் தேசிய அளவில் கவனம் பெற்ற லடாக் எம்.பி. இன்று (புதன்கிழமை) ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், "நாங்கள் காங்கிரஸ் கட்சியினரால் மாற்றாந்தாய் பிள்ளைகள் போல் நடத்தப்பட்டோம். கல்வி அகதிகள்போல் வாழ்ந்தோம். எங்கள் பகுதியில் கல்வி நிலையங்களே இல்லை. பள்ளிக்குச் செல்ல வேண்டுமானால் நாங்கள் வேறு நகரங்களுக்கே போக வேண்டியிருந்தது.

2012-ல் நான் அரசியல் பயணத்தைத் தொடங்க விரும்பினேன். அதற்குக்கூட நான் ஜம்முவுக்கு தான் செல்ல வேண்டியிருந்தது. அங்கு பாஜக கொள்கையின்பால் ஈர்ப்பு ஏற்பட்டு அக்கட்சியில் இணைந்தேன். லே மாவட்ட பாஜக அலுவலகச் செயலர் பதவி வழங்கப்பட்டது. ஆரம்ப நாட்களில் அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யும் வேலைதான் செய்தேன். படிப்படியாக செய்தித் தொடர்பாளரானேன்.

லடாக் இப்போது சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை எங்களுக்கு சட்டப்பேரவை வேண்டுமென்றால் நாங்கள் மீண்டும் மோடியிடம் செல்வோம். 52 இன்ச் மார்பளவு கொண்ட அந்தத் தலைவர் பெருந்தன்மையுடன் எங்களுக்காக அதையும் செய்து கொடுப்பார்.

ஜனநாயகப் படுகொலை என்று சிறப்பு அந்தஸ்து ரத்தை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள் அன்று காஷ்மீர் பண்டிட்டுகள் பள்ளத்தாக்கிலிருந்து வெளியேற்றப்பட்டபோது எங்கிருந்தனர்? கலாச்சாரம் சிதைக்கப்பட்டபோது எங்கிருந்தனர்? லடாக் புத்தமத பெரும்பான்மைப் பகுதியாக இருந்தது. ஆனால், இன்று அது முஸ்லிம் மக்களின் பெரும்பான்மைப் பகுதியாக இருக்கிறது. இந்த மாற்றத்தை அவர்கள் கேள்விக்குள்ளாக்கினார்களா?

கார்கிலில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் இருக்கின்றனர். அவர்களை காஷ்மீர் வாசிகள் ஏற்கமாட்டார்கள். அங்கே கார்கில் முஸ்லிம்களால் ஒரு கடையைத் திறக்க முடியாது. ஏன், வாகனத்தை பார்க்கிங்கில் நிறுத்தக்கூட முடியாது.

ஜனநாயகம், ஜனநாயகம்.. என முழங்கும் காங்கிரஸ் கட்சிக்குள் இன்று முழுமையாக ஜனநாயகம் மட்டுமே இருக்கிறது. ஆம், அங்கு தலைவர் இல்லை. அதனால், யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேசலாம். அப்படிப் பேசுபவர் மீது நடவடிக்கைகூட எடுக்க முடியாது என்ற நிலையே இருக்கிறது.

இந்த தேசத்தின் இளைஞர்களுக்கு ஓர் அறிவுரை சொல்ல விரும்புகிறேன். ஏ.சி. அறையில் உட்கார்ந்துகொண்டு ட்வீட் செய்யலாம். ஃபேஸ்புக், யூடியூப் பயன்படுத்தலாம். ஆனால், நாம் விரும்பும் சமூக மாற்றத்தைக் கொண்டுவர வேண்டுமானால் அதற்குப் போராட வேண்டும். நீங்கள் காண வேண்டும் மாற்றம் உங்களிடமிருந்தே தொடங்க வேண்டும்.

சீனா, பாகிஸ்தானுடன் எல்லையைப் பகிரும் ஒரு தொகுதியின் எம்.பி. என்ற முறையில் 370 ரத்தை ஆசீர்வாதமாகப் பார்க்கிறேன்.

இனி வளர்ச்சிக்கான பாதை திறக்கும். அக்‌ஷய் சின்னும் இந்தியாவின் பகுதியென்றே நாங்கள் கருதுகிறோம். இதில் சீனா என்ன சொன்னாலும் எங்களுக்குக் கவலையில்லை. எல்லைப் பிரதேச மக்கள்தான் தேசத்தின் உண்மையான பாதுகாவலர்கள்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in