எனது பிறந்தநாளுக்கு கேக் கொண்டுவர தவறியதேயில்லை: சுஷ்மா மறைவுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி நினைவுகூர்ந்த அத்வானி 

எனது பிறந்தநாளுக்கு கேக் கொண்டுவர தவறியதேயில்லை: சுஷ்மா மறைவுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி நினைவுகூர்ந்த அத்வானி 
Updated on
1 min read

சுஷ்மா ஸ்வராஜ் மறைவை ஒட்டி, பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், "எனது பிறந்தநாளன்று எனக்குப் பிடித்தமான கேக்குடன் என்னை சந்திக்க சுஷ்மா தவறியதேயில்லை" என நினைவு கூர்ந்திருக்கிறார்.

முன்னாள் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நேற்றிரவு மறைந்தார். மாரடைப்பு காரணமாக மறைந்த அவரது உடல் டெல்லியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி. தனது மகள் பிரதீபா அத்வானியுடன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியதோடு சுஷ்மா குடும்பத்தினருக்கு ஆறுதலும் கூறினார்.

சுஷ்மாவின் மறைவை ஒட்டி அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், "பாஜகவில் தனது தடத்தை சுஷ்மா பதித்ததிலிருந்தே அவருடன் இணைந்து நான் பணியாற்றியிருக்கிறேன். 80-களில் நான் பாஜக தேசியத் தலைவராக இருந்தபோது சுஷ்மா நம்பிக்கைக்குரிய இளம் போராளியாக இருந்தார். அவரை நான் எனது குழுவில் இணைத்தேன்.

அதன் பின்னர் ஆண்டுகள் உருண்டோட அவர் மிகவும் பிரபலமானார். எங்கள் கட்சியின் முன்னணித் தலைவரானார். ஏன், பெண் அரசியல் ஆளுமைகளுக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்தார்.

அவர் ஓர் அற்புதமான பேச்சாளர். அவரது பேச்சில் அரசியல் நிகழ்வுகளை நினைவுகூரும் விதத்தைக் கண்டு நான் வியந்திருக்கிறேன். பழைய சம்பவங்களை அவர் அவ்வளவு துல்லியமாக ஒருங்கிணைத்துப் பேசுவார்.

இந்த ஆளுமைகளைத் தாண்டி அவர் ஒரு சிறந்த நபர். நல்ல மனிதர். அனைவரையும் அன்புடன் அரவணைத்துச் செல்பவர். இதுவரை எனது எந்த ஒரு பிறந்தநாளையும் அவர் மறந்ததில்லை. ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் எனக்கு விருப்பமான கேக்குடன் என்னை சந்திக்க வந்துவிடுவார்.

இந்த தேசம் ஒரு குறிப்பிடத்தக்கத் தலைவரை இழந்துவிட்டது. இது ஈடு செய்ய இயலாத இழப்பு. சுஷ்மாவின் இழப்பை நான் என்றென்றும் ஆழமாக உணர்வேன். அவரது ஆத்மா அமைதி காணட்டும்.

அவரது கணவர் ஸ்வராஜ், மகன் பன்சூரி மற்றும் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலை உரித்தாக்குகிறேன். ஓம் சாந்தி" என எழுதியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in