என் வாழ்நாளில் இதைப் பார்க்கத்தான் காத்திருந்தேன்: சுஷ்மா ஸ்வராஜின் கடைசி ட்வீட்

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் : படம் ஏஎன்ஐ
முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் : படம் ஏஎன்ஐ
Updated on
1 min read

புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகைசெய்யும் அரசியலமைப்புச் சட்டம் 370 பிரிவை நீக்கி மசோதா நிறைவேற்றிய பின் அதைப் பாராட்டி சுஷ்மா ஸ்வராஜ் வெளியிட்ட ட்விட்டர் செய்திதான் அவரின் கடைசிச் செய்தியாகும்.

பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன்பிறகும் அவர் வெளியுறவுத் துறை அமைச்சராக துடிப்புடன் பணியாற்றினார். ஆனால், உடல்நிலையைக் கருத்தில் கொண்டு மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிட விரும்பவில்லை என்று பாஜக மேலிடத்திடம் கூறிவிட்டார்.

இந்நிலையில், நேற்றிரவு சுஷ்மாவுக்கு மீண்டும் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் உடனடியாக அவரைச் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் சுஷ்மாவுக்குத் தீவிர சிகிச்சை அளித்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்று மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு இருந்த 370 பிரிவை நீக்கி மத்திய அரசு மாநிலங்களவையில் மசோதா நிறைவேறிய நிலையில், நேற்று மக்களவையிலும் வெற்றிகரமாக நிறைவேறியது.

இதையடுத்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததையும், மாநிலத்தை இரண்டாகப் பிரித்து அறிவித்ததையும் சுஷ்மா ஸ்வராஜ் வரவேற்று ட்வீட் செய்திருந்தார்.

அதில் சுஷ்மா ஸ்வராஜ் நேற்று இரவு 7.23 மணிக்கு வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், " என் வாழ்நாளில் இந்த நாளைக் காணத்தான் காத்திருந்தேன். பிரதமர் மோடிக்கு நன்றி. மிக்க நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் " எனத் தெரிவித்தார். ஆனால், அடுத்த சில மணிநேரங்களில் சுஷ்மா மரணத்தைத் தழுவினார்.

திங்கள்கிழமை மாநிலங்களவையில் காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது குறித்து சுஷ்மா ட்விட்டரில் கூறுகையில், "மாநிலங்களவையில் சிறப்பாகச் செயல்பட்டு மசோதாவை நிறைவேற்றிய மரியாதைக்குரிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நன்றி தெரிவிக்கிறேன்" எனத் தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மறுசீரமைப்பு மசோதா நிறைவேற்றப்பட்ட பின் மகிழ்ச்சியுடன் மாலை ட்விட்டரில் பிரதமருக்கு நன்றி தெரிவித்த சுஷ்மா ஸ்வராஜ் அடுத்த சில மணிநேரங்களில் இந்த உலகை விட்டுப் பிரிந்தது அவரின் குடும்பத்தினரையும், ஆதரவாளர்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.


பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in