

புதுடெல்லி,
முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மறைவு தனக்கு தனிப்பட்ட இழப்பு. இந்திய அரசியலின் புனிதமான பகுதி முடிவுக்கு வந்துள்ளது என்று பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன்பிறகும் அவர் வெளியுறவுத் துறை அமைச்சராக துடிப்புடன் பணியாற்றினார். ஆனால், உடல்நிலையைக் கருத்தில் கொண்டு மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிட விரும்பவில்லை என்று பாஜக மேலிடத்திடம் கூறிவிட்டார்.
இந்நிலையில், நேற்றிரவு சுஷ்மாவுக்கு மீண்டும் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் உடனடியாக அவரைச் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் சுஷ்மாவுக்குத் தீவிர சிகிச்சை அளித்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்று எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சுஷ்மா ஸ்வராஜ் மறைவுக்கு பாஜக தலைவர்கள், அனைத்துக் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சுஷ்மா ஸ்வராஜ் மறைவுச் செய்தி கேட்டதும் பிரதமர் மோடி ஆழ்ந்த வருத்தத்துடன் ட்விட்டரில் இரங்கல் செய்தி வெளியிட்டார். மேலும் சுஷ்மா ஸ்வராஜ் இல்லத்துக்கு சென்ற பிரதமர் மோடி அவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். உடன் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவும் சென்றிருந்தார்.
அதில் ட்விட்டரில் பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கலில் கூறியிருப்பதாவது:
''சுஷ்மா ஸ்வராஜ் இழப்பு எனக்கு தனிப்பட்ட இழப்பு. எப்போதும் நினைவு கொள்ளத்தக்க தலைவரை இழந்ததை நினைத்து இந்த தேசம் வருத்தமடைகிறது. சுஷ்மா ஸ்வராஜ் தான் வெளியுறவுத்துறை அமைச்சராகப் பணியாற்றும்போது, ஓய்வின்றி உழைத்ததை மறக்க முடியாது. அவரின் உடல்நிலை சரியாக ஆரோக்கியமாக இல்லை என்ற போதிலும்கூட தன்னுடைய பணிக்கு நேர்மையாக தன்னால் இயன்ற பணிகளைச் செய்தார். தனது அமைச்சகங்கள் குறித்த அனைத்து விவரங்களை விரல் நுனியில் வைத்திருந்தார். அவரின் அர்ப்பணிப்பு மற்றும் உத்வேகம் ஈடுஇணையில்லாதது.
சுஷ்மா ஸ்வராஜின் மறைவு மூலம் இந்திய அரசியலில் புனிதமான பக்கம் முடிவுக்கு வந்துள்ளது. அவரின் கனிவான குணம் கோடிக்கணக்கான மக்களுக்கு ஊக்கமாக இருந்தது. சிறந்த பேச்சாளராகவும், போற்றத்தகுந்த நாடாளுமன்ற உறுப்பினராகவும் சுஷ்மா இருந்தார். கட்சி வேறுபாடுகள் இன்றி அனைத்து தரப்பினரையும் ஈர்த்திருந்தார் சுஷ்மா.
பாஜகவின் நலன்கள், கொள்கைகள் போன்றவற்றில் சுஷ்மா ஸ்வராஜுக்கு யாரையும் ஈடு செய்ய முடியாது. பாஜகவின் வளர்ச்சிக்கு ஏராளமான பங்களிப்பு செய்துள்ளார். எந்தத் துறையை அளித்தாலும் அவர் சிறப்பாக அதில் செயல்பட்டுள்ளார்.
பல்வேறு நாடுகளுடன் இந்தியா சிறந்த நட்புறவைப் பராமரிக்க சுஷ்மா முக்கியப் பங்காற்றியுள்ளார். ஒரு அமைச்சராக நாட்டு மக்கள் உலகின் எந்த இடத்தில் இருந்து உதவி கேட்டாலும் தயங்காமல் செய்து தனது பொறுப்பை நிறைவேற்றியுள்ளார்.
சுஷ்மா ஸ்வராஜின் மறைவு எனக்கு தனிப்பட்ட முறையில் இழப்பு. தேசத்துக்கு அவரின் பங்களிப்புக்காக அவர் நினைவுகூரப்படுவார். சுஷ்மா ஸ்வராஜின் குடும்பத்தினர், ஆதரவாளர்கள், நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன்".
இவ்வாறு மோடி தெரிவித்துள்ளார்.
பிடிஐ