

புதுடெல்லி
சர்ச்சைக்குரிய ஆர்டிஐ, முத்தலாக் தடை உள்ளிட்ட மசோதாக்களை நிறைவேற்றி ஒத்திகை பார்த்த மத்திய அரசு, ரகசியமாக திட்ட மிட்டு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை யும் வெற்றிகரமாக ரத்து செய் துள்ளது.
மத்தியில் ஆளும் பாஜக கூட் டணிக்கு மக்களவையில் பெரும் பான்மை இருப்பதால் அனைத்து புதிய மசோதாக்களையும் எளிதாக நிறைவேற்றி விடுகிறது. ஆனால், மாநிலங்களவையில் பெரும் பான்மை இல்லாத காரணத்தால் முத்தலாக் உள்ளிட்ட சில முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற முடி யாத நிலை இருந்தது. இந்நிலை யில், தனது கூட்டணியில் இல்லாத பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளின் ஆதரவுடன் முத்தலாக் தடை, தீவிர வாத தடுப்பு, மோட்டார் வாகன, மற்றும் ஆர்டிஐ மசோதாக்களை நிறைவேற்றியது. இதனால் உற்சாக மடைந்த மத்திய அரசு, ரகசியமாக திட்டமிட்டு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தையும் வெற்றிகரமாக ரத்து செய்துள்ளது.
கடந்த ஒரு மாதத்துக்கு முன்பே இதற்கான பணிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ரகசியமாக தொடங்கி விட்டதாகக் கருதப்படுகிறது. குறிப் பாக, சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதற்கான தேதியையும் (ஆகஸ்ட் 5) முன்கூட்டியே குறித்த மத்திய அரசு, இதனால் காஷ்மீரில் கலவரம் ஏற்படுவதைத் தடுப்பதற் காக பாதுகாப்பை பலப்படுத்தியது. சுமார் 38 ஆயிரம் வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டனர். அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றப் பட்டனர். சட்டம் ஒழுங்கு தொடர் பான பணிகளை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கவனித்து வந்துள்ளார்.
இது ஒருபுறம் இருக்க, சட்ட ரீதியான நடவடிக்கைகளை சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மேற்கொண்டு வந்துள்ளார். அதே நேரம், இதுதொடர்பான மசோதாக் களை மாநிலங்களவையில் நிறை வேற்றுவதற்கு தேவையான ஆதரவை திரட்டும் பணி நாடாளு மன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியிடம் ஒப்படைக் கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோரும் இதில் முக்கிய பங்காற்றி உள்ளனர்.
ஆதரவு திரட்டியது எப்படி?
இவர்கள், ஒய்எஸ்ஆர் காங் கிரஸ் தலைவரும் ஆந்திர முதல்வ ருமான ஜெகன்மோகன் ரெட்டி, பிஜு ஜனதா தளம் தலைவரும் ஒடிசா முதல்வருமான நவீன் பட்நாயக், தெலங்கானா ராஷ்டிர சமிதி தலைவரும் தெலங்கானா முதல்வருமான கே.சந்திரசேகர ராவ் உள்ளிட்ட மூத்த தலைவர் களுடன் தொலைபேசியில் பேசி அரசின் முடிவுக்கு ஆதரவு திரட்டி உள்ளனர்.
இதுபோல, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியுடன் அக்கட்சியின் மூத்த தலைவர் சதிஷ் சந்திர மிஸ்ரா மூலம் பேசி உள்ளனர். இதன் காரணமாக காஷ்மீர் தொடர்பான மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு இந்தக் கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் ஆதரவு வழங்கி உள்ளனர். இத னால் இது தொடர்பான மசோதா மாநிலங்களவையில் எளிதாக நிறைவேறியது.
ஒட்டுமொத்தமாக காஷ்மீர் தொடர்பான இந்த நடவடிக்கை, பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்ட 4 அல்லது 5 அமைச்சர்கள் மற்றும் சில உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்திருந்தது.