

சென்னை
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்கீழ் காஷ்மீரை ஏன் கொண்டு வரக் கூடாது என்ற மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மாநிலங்களவை பேச்சுக்கு 35 ஆண்டுகளுக்குப்பின் செயல்வடிவம் கிடைத்துள்ளது.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370 மற்றும் 35 ஏ ஆகியவற்றை ரத்து செய்து மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். அத்துடன், காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுவதாகவும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் சட்டப்பேரவையை கொண்டதாகவும் லடாக் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் இருக்கும் என்று அறிவித்தார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மாநிலங்களவையில் இதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் இதே மாநிலங்களவையில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன், 1984-ம்ஆண்டு ஜூலை 26-ம் தேதி மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது, காஷ்மீர் குறித்து பேசிய பேச்சை, தற்போது நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும். காஷ்மீர் குறித்து அவர் எழுப்பிய கேள்விகள் அனைவராலும் அப்போது பாராட்டப்பட்டன.
காஷ்மீர் மாநிலத்தில் பரூக் அப்துல்லாவின் அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டிருந்த தருணத்தில், மாநிலங்களவையில் அவர் காஷ்மீர் குறித்த அதிமுகவின் நிலைப்பாட்டையும் தன் பேச்சில் தெளிவுபடுத்தினார். அப்போது அவர் பேசியதாவது:
காஷ்மீர் மாநிலத்தில் பரூக் அப்துல்லாவின் அரசை பிரதமர் இந்திராகாந்தி டிஸ்மிஸ் செய்துள்ளார். இந்த மாநிலம் ஒரு கலவர பூமியாக உள்ளது. இங்கு முஸ்லிம் பயங்கரவாதிகளுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது. ஆனால், அதை பரூக் அப்துல்லா ’மதப்பயிற்சி’ அளிக்கப்படுவதாக நியாயப்படுத்துகிறார். காஷ்மீரில் சுதந்திர தினம் கொண்டாட முடியவில்லை. இந்திய கிரிக்கெட் வீரர்கள் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட முடியவில்லை. ஆனால், பரூக் அப்துல்லா அரசு கலைக்கப்பட்டதற்காக ‘ஜனநாயகம் செத்துவிட்டது’ என்று திமுக ஒப்பாரி வைக்கிறது.
இறுதியாக மத்திய உள்துறை அமைச்சரிடம் 2 கேள்விகளை நான் முன்வைக்கிறேன். காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்
படுமா, இந்தியாவுடன் காஷ்மீரை ஒருங்கிணைப்பதை ஏன் தாமதப்படுத்துகிறீர்கள், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்கீழ் காஷ்மீரை ஏன் கொண்டுவரக் கூடாது.
இவ்வாறு ஜெயலலிதா கேள்வி எழுப்பினார்.
காஷ்மீர் குறித்த ஜெயலலிதாவின் அப்போதைய பேச்சு, சட்டப்பிரிவு 370-ஐ ஏன் ரத்து செய்யக்கூடாது என்பதை தெளிவுபடுத்துவதாக இருந்தது. ஜெயலலிதாவின் 35 ஆண்டுகளுக்கு முந்தைய பேச்சுக்கு தற்போது மத்திய அரசு செயல்வடிவம் கொடுப்பதாக அமைந்துள்ளது என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.