

புதுடெல்லி
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த 370-வது சட்டப்பிரிவு நீக்கத்தை குடியரசுத் தலைவர் அனுமதித்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காஷ்மீருக்கு கடந்த 72 ஆண்டுகளாக பல்வேறு சலுகைகளையும், சிறப்பு அந்தஸ்தையும் வழங்கி வந்த 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு நீக்கியது. இதுதொடர்பான மசோதா, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மாநிலங்களவையில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது.
இதைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் கோஷமிட்டனர். எனினும் இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கினார்.
இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல். சர்மா என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், ‘‘காஷ்மீர் சட்டப்பேரவையின் அனுமதியை பெறாமல் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் எப்படி அனுமதி வழங்கினார்? எனவே, இந்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும்’’ எனக் கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என மனுதாரர் வலியுறுத்தியுள்ளார்.- பிடிஐ