‘‘காஷ்மீர் வரலாற்றை தெரிந்து கொண்டு காங்கிரஸில் இருங்கள்’’ - சொந்த கட்சியினர் மீது குலாம் நபி ஆசாத் சாடல்

‘‘காஷ்மீர் வரலாற்றை தெரிந்து கொண்டு காங்கிரஸில் இருங்கள்’’ - சொந்த கட்சியினர் மீது குலாம் நபி ஆசாத் சாடல்
Updated on
1 min read

புதுடெல்லி

காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவை ஆதரித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் நிர்வாகிளுக்கு அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காஷ்மீர் வரலாற்றையும் சொந்த கட்சியின் வரலாற்றையும் தெரிந்து பேச வேண்டும் என அவர் சாடியுள்ளார்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370, 35ஏ சட்டப் பிரிவுகளை திரும்ப பெறும் தீர்மானம் மாநிலங்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவும் மாநிலங்களவையில் நிறைவேறியது.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெறும் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப் பட்டது. காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, இடதுசாரி கட்சிகள் உள்ளிட்டவை அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்தன.

அரசின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தாலும் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் வேறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஜனார்த்தன் திரிவேதி, பூபேந்தர் சிங் ஹூடா, மிலந்த் மராட்டே, அதிசி சிங் உள்ளிட்டோர் மத்திய அரசின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேசமயம் ராகுல் காந்தி மத்திய அரசுக்கு கடும் கண்டம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸில் மாறுபட்ட கருத்துக்கள் வெளிவந்துள்ளது பற்றி அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்திடம் செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்ததாவது:

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370, 35ஏ சட்டப் பிரிவுகளை திரும்ப பெறும் தீர்மானம் மிக மோசமான செயல். காஷ்மீர் மக்களை பழிவாங்கும் போக்கை மத்திய அரசு மேற்கொள்கிறது. மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் காங்கிரஸ் நிர்வாகிகள் முதலில் ஜம்மு - காஷ்மீர் வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும்.

குறைந்தபட்சம் காங்கிரஸ் வரலாற்றையாவது தெரிந்து இருக்க வேண்டும். இதையொல்லாம் தெரிந்து இருந்தால் அவர்கள் இதுபோன்று பேச மாட்டார்கள். இதை தெரிந்து கொண்ட பிறகு அவர்கள் காங்கிரஸில் தொடர வேண்டும். இதுபோன்றவர்களுக்கு பதிலளிக்க நான் விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in