Published : 06 Aug 2019 02:47 PM
Last Updated : 06 Aug 2019 02:47 PM

காஷ்மீர் மசோதா: வாக்கெடுப்பை புறக்கணித்தது ஏன்? - மம்தா பானர்ஜி விளக்கம்

கொல்கத்தா

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 சட்டப்பிரிவை திரும்ப பெறும் மத்திய அரசின் முடிவை ஒருபோதும் திரிணமூல் காங்கிரஸ் ஏற்காது, அதனால் தான் நேற்றைய வாக்கெடுப்பை புறக்கணித்தோம் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி விளக்கம் அளித்துள்ளார்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370, 35ஏ சட்டப் பிரிவுகளை திரும்ப பெறும் தீர்மானம் மாநிலங்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவும் மாநிலங்களவையில் நிறைவேறியது.

காஷ்மீரை, 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வகை செய்யும் மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 125 எம்.பி.க்களின் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது. 61 எம்.பி.க்கள் எதிர்த்து வாக்களித்தனர். ஒரு எம்.பி. வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

இதைத் தொடர்ந்து காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெறும் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப் பட்டது. காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, இடதுசாரி கட்சிகள் உள்ளிட்டவை அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்தன. ஆனால் திரிணமூல் காங்கிரஸ் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தது.

இதுகுறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று விளக்கமளித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370, 35ஏ சட்டப் பிரிவுகளை திரும்ப பெறும் தீர்மானம் மாநிலங்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசின் இந்த முடிவை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

காஷ்மீர் மக்களிடம், அரசியல் கட்சிகளிடம் கலந்து பேசாமல் எதேச்சதிகாரமாக இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. எனவே தான் நாங்கள் நேற்றைய வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வில்லை. வாக்கெடுப்பை புறக்கணித்தது ஆதரவு தெரிவித்ததாகாது.

புறக்கணித்ததன் மூலம் எங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளோம். ஜம்மு - காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை திரிணாமுல் காங்கிரஸ் முழுமையாக நிராகரிக்கிறது. அதற்காகவே வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x