

மக்களவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, ''நாட்டில் என்ன நெருக்கடி நிலையா அமலில் இருக்கிறது. காஷ்மீர் மறுசீரமைப்பு சட்ட மசோதாவை பாஜக அவசர கதியில் மாநிலங்களவையில் நிறைவேற்றியுள்ளது'' என்று குற்றம் சாட்டினார்.
மக்களவையில் டி.ஆர்.பாலு பேசியதாவது:
''உங்களிடம் பெரும்பான்மை இருக்கிறது என்பதால் சட்டத்தை எப்படி வேண்டுமானாலும் நிறைவேற்றுவீர்களா?
முதலில் தீர்மானம் கொண்டுவந்து அதன் மீது விவாதம் நடத்தி பின்னர் சட்ட மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி அதனை நிறைவேற்ற வேண்டும். ஆனால், பெரும்பான்மை இருக்கிறது என்பதால் அரசியலமைப்புச் சட்டத்தை மீறி மாநிலங்களவையில் காஷ்மீர் மசோதாவை பாஜக நிறைவேற்றியுள்ளது. உள்துறை அமைச்சர் சட்டத்தை மீறியிருக்கிறார்.
காஷ்மீரில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லாதபோது சிறப்பு அந்தஸ்தை நீக்கியது நியாயமற்ற செயல்.
உமர் அப்துல்லாவும், மெஹபூபா முப்தியும் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று நாடாளுமன்றம் வர வேண்டிய பரூக் அப்துல்லாவும் வரவில்லை. காஷ்மீர் தலைவர்கள் என்ன ஆனார்கள்? எதற்காக அவர்களை வீட்டுக் காவலில் வைத்துள்ளீர்கள் என்பதற்கான காரணத்தை மத்திய அரசு விளக்க வேண்டும்.
ராணுவத்தை துணையாக வைத்துக்கொண்டு மத்திய அரசு ஒரு சட்டத்தை நீக்கியுள்ளது. நாட்டில் என்ன நெருக்கடி நிலையா நிலவுகிறது?
யூனியன் பிரதேசங்கள் எல்லாம் மாநில அந்தஸ்து கோரும் வேளையில், பெரிய மாநிலமான ஜம்மு காஷ்மீரை யூனியன் பிரதேசமாக மாற்றும் வேலையை மத்திய அரசு செய்திருக்கிறது. காஷ்மீரைப் பிரிப்பதால் என்ன பயன் கிடைத்துவிடும். தீவிரவாதத்தை முற்றிலுமாக ஒழித்துவிடுவோம் என்று மத்திய அரசால் உறுதியாகக் கூற முடியுமா? உலகம் முழுவதுமே எவ்வளவு பாதுகாப்பு அம்சங்கள் இருந்தாலும்கூட 2% தீவிரவாதிகளாவது இருக்கத்தான் செய்வார்கள். அப்படியென்றால் இந்த மசோதாவின் பயன் என்ன? இதற்கும்கூட ஏதாவது பதிலை அரசு தயாரித்து வைத்திருக்கலாம்.
தேர்தல் அறிக்கையில் கூறியதை அவசர கதியில் நிறைவேற்றியுள்ளது பாஜக. காஷ்மீரில் பொதுவாக்கெடுப்பு நடத்தி மக்களின் கருத்தைக் கேட்ட பின்னரே இந்த முடிவை எடுத்திருக்க வேண்டும். ஏன் அவ்வாறு செய்யவில்லை?''
இவ்வாறு டி.ஆர்.பாலு பேசினார்.