

லக்னோ
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை திரும்பப் பெறும் முடிவை மனதார வரவேற்கிறேன், இது வரலாற்று முடிவு, இதனை அரசியலாக்க வேண்டாம் என ரேபரேலி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ அதிதி சிங் கூறியுள்ளார்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370, 35ஏ சட்டப் பிரிவுகளை திரும்ப பெறும் தீர்மானம் மாநிலங்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவும் மாநிலங்களவையில் நிறைவேறியது.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெறும் தீர்மானம் குரல் வாக் கெடுப்பு மூலம் நிறைவேற்றப் பட்டது. காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, இடதுசாரி கட்சிகள் உள்ளிட்டவை அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்தன.
அரசின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தாலும் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் வேறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் சோனியா காந்தி எம்.பி.யாக உள்ள ரேபரேலி மக்களவை தொகுதிக்குட்பட்ட ரேபரேலி சாதர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ அதிதி சிங் இதுகுறித்து இன்று கூறியதாவது:
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை திரும்பப் பெறும் முடிவை மனதார வரவேற்கிறேன். இதன் மூலம் ஜம்மு - காஷ்மீர் இந்தியாவின் தேசிய நீரோட்டத்தில் இணையும். இது வரலாற்று முடிவு. இதனை அரசியலாக்க வேண்டாம். ஒரு எம்எல்ஏவாக எனது தனிப்பட்ட முறையில் மத்திய அரசின் இந்த முடிவை மனதார வரவேற்கிறேன்’’ எனக் கூறியுள்ளார்.