Published : 06 Aug 2019 12:47 PM
Last Updated : 06 Aug 2019 12:47 PM

அயோத்தி வழக்கு: 1934-ம் ஆண்டிலிருந்து சர்ச்சைக்குரிய கட்டிடத்துக்குள் முஸ்லிம்கள் அனுமதிக்கப்படவில்லை: நிர்மோகி அஹாரா வாதம்

புதுடெல்லி,

அயோத்தி சர்ச்சைக்குரிய நிலவழக்கில் நாள்தோறும் இன்று விசாரணை தொடங்கிய நிலையில், கடந்த 1934-ம் ஆண்டில் இருந்து சர்ச்சைக்குரிய கட்டிடத்துக்குள் முஸ்லிம்களை அனுமதிக்கவில்லை என்று நிர்மோகி அஹாரா சார்பில் ஆஜராகிய வழக்கறிஞர் வாதிட்டார்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை நிர்மோகி அகாரா, ராம் லாலா, வக்பு வாரியம் ஆகியவை சமமாகப் பிரித்துக்கொள்ள கடந்த 2010-ம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 14 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

இதற்கிடையே அயோத்தி விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களிடம் சமரசப் பேச்சு நடத்த, உச்ச நீதிமன்றம் 3 பேர் கொண்ட குழுவை அமைத்தது. இக்குழுவில் வாழும் கலை அமைப்பின் தலைவர்  ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்குரைஞர் ஸ்ரீராம் பஞ்சு, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி கலிபுல்லா ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றிருந்தனர். 

இந்தக் குழு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், சமரசப் பேச்சில் இரு தரப்பினரும் உடன்பாட்டுக்கு வரவில்லை எனத் தெரிவித்தது. இதையடுத்து, வரும் 6-ம் தேதி(இன்று) முதல் அயோத்தி வழக்கில் நாள்தோறும் விசாரணை நடத்தப்படும் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் அறிவித்தார்.

அதன்படி இன்று வழக்கு விசாரணை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்களில் ஒருவரான நிர்மோகி அஹாரா சார்பில் மூத்த வழக்கறிஞர் சுஷில் ஜெயின் ஆஜராகினார். அவர் வாதிடுகையில், " அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தை நாங்கள்தான் நிர்வாகம் செய்து வருகிறோம், அந்தப் பகுதியையும் கையகப்படுத்தி இருக்கிறோம். நிர்மோகி அஹாரா என்பது அரசால் பதிவுசெய்யப்பட்ட ஓர் அமைப்பு.

எங்களின் மனு என்பது, சர்ச்சைக்குரிய இடத்தை நிர்வாகம் செய்யும் உரிமை, கைவசம் வைத்திருத்தல், எங்களைச் சார்ந்தது என்ற அடிப்படையில்தான் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய கட்டிடத்தில் உள்ள கர்பகிரஹம், ராம் ஜன்மஸ்தான் ஆகியவற்றை நாங்கள்தான் 100 ஆண்டுகளாகக் கைவசம் வைத்துள்ளோம். கர்பகிரஹத்துக்கு வெளியே இருக்கும் பகுதிகளான சீதா ரசோய், சாபத்ரா, பந்தர் கார்க் ஆகியவற்றையும் நாங்கள்தான் வைத்துள்ளோம். இந்த வழக்கிலும் இந்தப் பகுதிகள் சர்ச்சைக்குரியதாக இருந்தது இல்லை" என வாதிட்டார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x