370-வது சட்டப்பிரிவு: காங்கிரஸ் நிர்வாகிகளிடம் குழப்பம்; இன்று விவாதித்து முடிவு?

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

புதுடெல்லி

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை திரும்ப பெறும் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்களிடையே வேறுபட்ட கருத்துக்கள் வெளியாகி வரும் நிலையில் இதுபற்றி எம்.பி.க்கள் கூட்டம் மற்றும் காரிய கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. 

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370, 35ஏ சட்டப் பிரிவுகளை திரும்ப பெறும் தீர்மானம் மாநிலங்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவும் மாநிலங்களவையில் நிறைவேறியது.

காஷ்மீரை, 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வகை செய்யும் மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 125 எம்.பி.க்களின் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது. 61 எம்.பி.க்கள் எதிர்த்து வாக்களித்தனர். ஒரு எம்.பி. வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இதைத் தொடர்ந்து காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெறும் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப் பட்டது.

காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, இடதுசாரி கட்சிகள் உள்ளிட்டவை அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்தன. அரசின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தாலும் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் வேறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

காங்கிரஸ் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் மாநிலங்களவை கொறடா புவனேஸ்வர் காலிட்டா நேற்று எம்.பி. பதவியில் இருந்து விலகினார். இதுமட்டுமின்றி ஜனார்த்தன் திரிவேதி, மிலிந்த் தியோரா உள்ளிட்ட மூத்த தலைவர்களும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டப்பிரிவு 370-ஐ திரும்ப பெறும் முடிவை வரவேற்றுள்ளனர். 

அதேசமயம் குலாம்நபி ஆசாத், ப.சிதம்பரம் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆளுக்கு ஒருவிதமாக பேசி வருவதால் காங்கிரஸ் நிர்வாகிகளிடையே ஒருவித குழப்பம் நிலவி வருகிறது. இதையடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளிநாடு சென்றுள்ளதால் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தலைமையில் இன்று எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

அதுபோலவே காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டம் இன்று மாலை நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் காஷ்மீர் மசோதாக்கள் மக்களவையில் இன்று விவாதித்து நிறைவேற்றப்பட உள்ளது. 
எனவே காங்கிரஸ் எம்.பி.க்கள் மூத்த தலைவர்கள் அவையில் இருக்க வேண்டும் என்பதால் காரிய கமிட்டி கூட்டம் நடைபெறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இருப்பினும் இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு எதையும் கட்சி தலைமை வெளியிடவில்லை.
 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in