டெல்லி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள தமிழ் பேராசிரியர் பதவிகளை நிரப்ப மக்களவையில் வலியுறுத்தல் 

டெல்லி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள தமிழ் பேராசிரியர் பதவிகளை நிரப்ப மக்களவையில் வலியுறுத்தல் 
Updated on
1 min read

ஆர்.ஷபிமுன்னா

டெல்லி பல்கலைக்கழகத்தில் பல வருடங்களாகக் காலியாக உள்ள தமிழ் பேராசிரியர்களுக்கான பதவிகளை நிரப்ப மக்களவையில் நேற்று வலியுறுத்தப்பட்டது. இதை இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் உறுப்பினர் கே.நவாஸ் கனி பூஜ்ஜிய நேரத்தில் எழுப்பினார்.

இது குறித்து ராமநாதபுரம் தொகுதி உறுப்பினரான நவாஸ் கனி பேசியதாவது: டெல்லியில் சுமார் பதிமூன்று லட்சம் தமிழர்கள் வாழ்வதாக கருதப்படுகிறது. இவர்களுக்காக டெல்லி தமிழ் கல்வி சங்கத்தினரால் நடத்தப்படும் ஏழு தமிழ் பள்ளிகளில் ப்ளஸ்டூ வரை தமிழ் பயிலும் மாணவர்கள் உள்ளனர். 

இவர்களுக்கு பள்ளிக்கல்வி பெறுவதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், பள்ளிக்கு பின் உயர்கல்வி பயில அவர்களுக்கு பெரும் பிரச்சனையாக உள்ளது.

டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் இரண்டு பிரபல கல்லூரிகளிலும் தமிழ்மொழிக்கான பேராசிரியர் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது. லேடி ஸ்ரீராம் மகளிர் கல்லூரியிலும், மிராண்டா ஹவுஸ் மகளிர் கல்லூரியிலும் சுமார் பத்து ஆண்டுகளாக தமிழ் மொழிக்கான பேராசிரியர் பணியிடம் காலியாகவே உள்ளன. 

இவர்களில் பெண்குழந்தைகள் அதிகம் என்பதால் அவர்களால் தம் உயர் கல்வியை தொடரமுடியாமல் உள்ளது. டெல்லியில் மத்திய அரசின் கல்வியியலுக்கான(பிஎட்) நிறுவனத்தில் 2016 ஆம் ஆண்டு முதல் தமிழ்பாடப் பிரிவு மூடப்பட்டுள்ளது. 

இதற்கு அந்த துறையில் நிலவும் உட்பூசல் காரணமாக உள்ளது. ஆனால், அதற்கான நுழைவுத்தேர்வில் தமிழ் மாணவர்கள் தகுதிபெறுவதில்லை எனத் தவறானக் காரணம் கூறப்பட்டுள்ளது. 

டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் இந்த மத்திய அரசின் நிறுவனம் கல்வியியலில் உயர்கல்வி நிறுவனமாக செயல்படும் இந்த நிறுவனம் 1947 ஆம் ஆண்டு, இந்தியாவின் முதல் மத்திய கல்வித்துறை அமைச்சரான மவுலானா அப்துல் கலாம் ஆசாத்தால் அமைக்கப்பட்டது.

இதில், தமிழுக்காக ஏழு உள்ளிட்ட மாணவர்கள் ஒவ்வொரு வருடமும் பொது நுழைவுத்தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு வந்தனர். கடந்த மூன்று வருடங்களாக தமிழுக்கான மாணவர்கள் சேர்க்கை நிறுத்தப்பட்டு அந்த இடங்களை வேறு பாடப்பிரிவுகளுக்கும் மாற்றப்பட்டு விட்டன.

இது, தமிழ் மொழிக்கு எதிரான சதியாகவும் தமிழக மக்கள் அஞ்சுகின்றனர்.  இது பொய் என நிரூபிக்க மத்திய அரசு உடனடியாக ஆவண செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in