Published : 06 Aug 2019 09:57 AM
Last Updated : 06 Aug 2019 09:57 AM

காங்கிரஸ் கட்சிக்கு 14 மாதங்களாக அடிமை போல வேலை செய்தேன்; முதுகில் குத்திவிட்டார்கள்: குமாரசாமி குற்றச்சாட்டு 

பெங்களூரு,

கடந்த 14 மாதங்களாக காங்கிரஸ் கட்சிக்கு அடிமை போல் வேலை செய்தேன். ஆனால், என் முதுகில் குத்தி, ஆட்சி கவிழக் காரணமாகிவிட்டார்கள் என்று மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான குமாராசாமி வேதனை தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் கடந்த ஆண்டு நடந்த சட்டபேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜகவும் பெரும்பான்மையை நிரூபிக்கப் போராடியும் தோல்வி அடைந்தது. இதையடுத்து, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தன. முதல்வராக ஜேடிஎஸ் தலைவர் குமாரசாமி பொறுப்பேற்றார். 

தேர்தலில் இரு கட்சிகளும் எதிரியாக இருந்ததால், இந்தக் கூட்டணியை இரு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் விரும்பவில்லை. கூட்டணிக்குள் தொடர்ந்து குழப்பம் நீடித்ததால், 14 மாதங்களில் ஆட்சி கவிழ்ந்தது. இதன்பின் காங்கிரஸ் கட்சியுடன் ஜேடிஎஸ் கட்சி கூட்டணி வைத்திருக்குமா என்ற உறுதியில்லாத நிலை இருந்தது. ஆனால், அது குறித்து காங்கிரஸ் கட்சிதான் முடிவு செய்ய வேண்டும் என்று ஜேடிஎஸ் தலைவர்கள் தேவகவுடா, குமாராசமி  தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்னாள் முதல்வர் குமாரசாமி வைத்துள்ளார்.

அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: 

''நான் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் முழுமையான சுதந்திரம் அளித்திருந்தேன், கார்ப்பரேஷன் சேர்மனுக்குக் கூட முழு சுதந்திரம் அளித்திருந்தேன்.

ஆனால், ஆட்சி கவிழ்ந்த பின் நான் தான் காரணம் என்று என்னை ஏன் குறை சொல்கிறார்கள் எனத் தெரியவில்லை. எனக்கு ஒன்றும் தெரியவில்லை. மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் நாங்கள் கூட்டணி அமைத்ததில் இருந்து காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களுக்கும், எனது சொந்தக் கட்சி எம்எல்ஏக்களுக்கும் நான் கடந்த 14 மாதங்களாக ஒரு அடிமையைப் போல் பணியாற்றினேன். 

கர்நாடக சட்டப்பேரவையில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காதபோது, காங்கிரஸ் தலைமை முழுமனதுடன் வந்து கூட்டணி அமைக்கக் கேட்டார்கள். நாங்களும் சம்மதித்துதான் கூட்டணி ஆட்சிக்கு சம்மதித்தோம். ஆனால், காங்கிரஸ் கட்சியுடன் ஜேடிஎஸ் கட்சி கூட்டணி சேர்வதை மாநிலத்தில் உள்ள சில காங்கிரஸ் தலைவர்கள் விரும்பவில்லை என்பதை அறிந்தோம்.

கூட்டணி ஆட்சி அமைத்ததில் இருந்து, காங்கிரஸ் கட்சியின் ஒரு சில தலைவர்கள் என்னை வெளிப்படையாக விமர்சித்தும், மக்களிடம் பேசியும் வந்ததை நான் அறிவேன். எங்கள் கட்சி எம்எல்ஏ தொகுதிக்கு ஒதுக்கிய பணத்தைக் காட்டிலும் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்களின் தொகுதிக்கு அதிகமான பணத்தை ஒதுக்கீடு செய்தது என்னுடைய அரசு.

எந்த எம்எல்ஏவும் என்னிடம் முன் அனுமதி பெறாமல் சந்தித்தார்கள். அதற்கு அவர்களுக்கு அனுமதி அளித்திருந்தேன். அவர்களின் தொகுதி மேம்பாட்டுக்கு எந்தவிதமான கோரிக்கை வைத்தாலும் உடனடியாக அதைப் பரிசீலித்து உடனுக்குடன் முடிவு எடுத்தேன். முந்தைய காங்கிரஸ் அரசு செய்ய முடியாததை கடந்த 14 மாதங்களில் என்னுடைய அரசு செய்தது. காங்கிரஸ் எம்எல்ஏக்களின் தொகுதிக்கு மட்டும் கடந்த 14 மாதங்களில் ரூ.19 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்திருக்கிறேன்.

காங்கிரஸ் கட்சியுடன் நாங்கள் கூட்டணி அமைத்ததை எங்கள் கட்சியில் உள்ள தலைவர்களே விரும்பவில்லை. ஆனாலும், நான் காங்கிரஸ் உதவியுடன் நான் கூட்டணி அமைத்தேன். இந்த ஆட்சியால் அவர்களுக்கும் சந்தோஷம் இல்லை. எப்போது வேண்டுமானாலும் காங்கிரஸ் தலைவர்கள்  முதுகில் குத்தலாம் எனத் எங்கள் கட்சியினர் தெரிந்திருந்தார்கள். 

இப்போது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பின் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.கடந்த 14 மாதங்களாக மாநிலத்தின் வளர்ச்சிகாகவே பணியாற்றினேன், ஆனால் என்னுடைய பணியை யாரும் பாராட்டவில்லை என்ற வருத்தம் எனக்கு வேதனை அளிக்கிறது. 

சாதி, மதம், பணம் ஆகியவற்றின் பலத்துடன் இன்று அரசியல் நடைபெறுகிறது. இங்கே ஒழுக்கம் என்பதே கிடையாது. எனவே அரசியலில் நல்லவர்களால் நீடிக்க முடியாது. இது எனக்குத் தனிப்பட்ட முறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனால் தான் அரசியலில் இருந்து விலக முடிவெடுத்தேன். எனது ஆதரவாளர்கள் கேட்டுக்கொண்டதால் தொடர்கிறேன்.

எதிர்காலத்திலும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை அமைப்பதை எங்கள் கட்சியில் உள்ள பெரும்பாலான தலைவர்கள் விரும்பவில்லை. ஆனால் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டத் தலைமை, எங்களிடம் நல்ல நெருக்கத்துடன் இருக்கிறார்கள். எதிர்காலத்தில் என்ன நடக்கபோகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்''.

இவ்வாறு குமாரசாமி தெரிவித்தார்.

ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x