

சண்டிகர்
ஜம்மு காஷ்மீர் தொடர்பான மத்திய அரசின் முடிவு குறித்து எவரும் கொண்டாட்டத்திலோ அல்லது போராட்டத்திலோ ஈடுபடக்கூடாது என பஞ்சாபில் உத்தரவிடப்பட் டுள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது சட்டப்பிரிவு நேற்று ரத்து செய்யப் பட்டதை தொடர்ந்து பஞ்சாபில் சட்டம் ஒழுங்கு தொடர்பான உயர்நிலை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. முதல்வர் அமரிந்தர் சிங் தலைமையில் நடை பெற்ற கூட்டத்தில் மாநில தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
இதில் அமரிந்தர் சிங் பேசும் போது, “மத்திய அரசின் இந்த நடவடிக்கையை பாகிஸ்தான் எளிதாக எடுத்துக் கொள்ளாது. இந்தியாவுக்கு எதிராக சதிச்செய லில் ஈடுபட வாய்ப்புள்ளது. இதனை எதிர்கொண்டு முறியடிக்க காவல் துறையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும்” என்றார்.
காஷ்மீரை ஒட்டிய பஞ்சாப் மாவட்டங்களில் பாதுகாப்பை அதிகரிக்கவும் பஞ்சாபில் உள்ள காஷ்மீர் மாணவர்கள் 8 ஆயிரம் பேருக்கு பாதுகாப்பை உறுதி செய்யவும் அவர் உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் தொடர்பான மத்திய அரசின் முடிவு குறித்து எவரும் கொண்டாட்டத்திலோ அல்லது போராட்டத்திலோ ஈடுபட காவல்துறை தடை விதித்துள்ளது.