

கர்நாடகாவில் முக்கிய பிரமுகர்களிடம் லஞ்சம் கேட்டு மிரட்டிய வழக்கில் கைதான லோக் ஆயுக்தா நீதிபதி பாஸ்கர் ராவின் மகன் அஸ்வின் ராவிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் மேலும் பல முக்கிய அதிகாரிகள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடகத்தைச் சேர்ந்த அரசு அதிகாரி எம்.என்.கிருஷ்ணமூர்த்தி, “எனது வீட்டில் சோதனை நடத்தாமல் இருப்பதற்காக ரூ. 1 கோடி லஞ்சம் தர வேண்டும் என லோக் ஆயுக்தா நீதிபதி பாஸ்கர் ராவின் மகன் அஸ்வின் ராவ் மிரட்டினார்” என புகார் அளித்தார். இதுபோல, பல்வேறு அதிகாரிகளிடம் ரூ. 100 கோடி வரை அஸ்வின் ராவ் லஞ்சம் வாங்கியதாக தகவல் வெளியானது.
இதுகுறித்து விசாரணை நடத்தி வரும் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் 5 லோக் ஆயுக்தா அதிகாரிகளை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த நீதிபதி பாஸ்கர் ராவின் மகன் அஸ்வின் ராவையும் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்தனர்.
இந்நிலையில் அவரை பெங்களூரு லோக் ஆயுக்தா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, 9 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் அஸ்வின் ராவை சிஐடி தலைமை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அஸ்வின் ராவிடமிருந்து கைப்பற்றிய 4 செல்போன், 2 லேப்டாப் ஆகியவற்றை கடந்த 2 நாட்களாக ஆராய்ந்தனர். அதில் பல அதிகாரிகள் தொடர்பான முக்கிய ஆவணங்கள் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனை அடிப்படையாக வைத்து மேலும் சில முக்கிய பிரமுகர்களையும், அதிகாரிகளையும் கைது செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்கு ஆதாரமாக பல மின்னஞ்சல்களும், வங்கி பண பரிவர்த்தனைகளும் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.