எங்கள் அடையாளத்தை இழந்து விட்டோம்: காஷ்மீர் மக்கள் 

படம். | பிடிஐ.
படம். | பிடிஐ.
Updated on
2 min read

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-ம் சட்டப்பிரிவை நீக்கியதையடுத்து புதிய வன்முறைகள் ஏற்படும் என்று காஷ்மீர் மக்கள் அச்சம் தெரிவித்துள்ளார்கள்.

அதாவது முஸ்லிம் பெரும்பான்மை என்ற அடையாளத்தை தாங்கள் இழந்து விட்டதாக காஷ்மீர் மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பாக ஸ்ரீநகரில் வசிக்கும் 50 வயதாகும் பரூக் அகமது ஷா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, “இந்த முடிவு எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எங்களின் உணர்வுகள் இந்த 370ம் சட்டப்பிரிவுடன் பின்னிப் பிணைந்தது, ஆகவே அதனை நீக்கியிருப்பது ஏமாற்றமாக உள்ளதோடு இப்பகுதியின் முஸ்லிம் பெரும்பான்மை அடையாளம் என்ற தன்மை இழக்கப்படுகிறது. 

மாநிலத்தின் ஆளும் கட்சிகள் கடந்த 70 ஆண்டுகளாக மத்தியில் ஆளும் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து இந்த 370ம் சட்டப்பிரிவை வெறும் எலும்புக்கூடாக வைத்திருக்கவே வழி செய்தனர். ஆனால் இதனை நீக்குவது என்பது தற்போது மக்களின் கோபாவேசத்துக்கு ஆளாக நேரிடும்." என்றார்.

அர்ஷித் வார்சி என்ற 20 வயது நபர் கேட்கும் போது, “எத்தனை நாட்கள் எங்களை வீட்டுக்காவலில் வைக்க முடியும்? 370-ம் பிரிவை நீக்கி விட்டார்கள் என்பதற்காக நாங்கள் எங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த முடியாது என்பது அல்ல” என்றார். 

பெயர் கூற விரும்பாத பள்ளி ஆசிரியர் ஒருவர், தற்போதைய நெருக்கடிகளுக்கு மாநிலத்தின் மையநீரோட்ட கட்சிகளே காரணம் என்றார்.  “இன்று நாங்கள் எங்கள் அடையாளங்களை இழந்து விட்டோம். துரதிர்ஷ்டவசமாக அரசு எடுத்த முடிவு அமைதியை ஏற்படுத்தாமல் மக்களிடையே கொந்தளிப்பையே ஏற்படுத்தும் என்பதுதான்” என்றார் பள்ளி ஆசிரியர். 

வர்த்தகர் ஜலீல் அகமட் பட் , “இந்தச் சூழல் எப்படி வளர்ச்சி பெறுமென்று தெரியவில்லை. ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு என்ன நடக்கும் என்று தெரியவில்லை.  மோசமான காலங்களை நோக்கிப் பயணிக்கிறோம். இணையதளம், தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. எங்களுக்கும் வெளி உலகுக்கும் தொடர்பு என்பதே இல்லை. என்னுடைய குழந்தைகள் வெளிமாநிலங்களில் படிக்கின்றனர், அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இங்கு என்ன நடக்கிறது என்பது பற்றி அவர்களும் கவலையாக இருக்கிறார்கள், நாங்களும் அவர்கள் பற்றி கவலையாக இருக்கிறோம்" என்றார். 

நடுத்தர வயது தொழில் முனைவோரான பாத்திமா பானு என்பவர் கூறும்போது, “370ம் பிரிவை ரத்து செய்வதன் மூலம் ஆண்டாண்டு காலம் மாநிலம் சந்தித்து வரும் வன்முறைகளை ஒடுக்கி விட முடியுமா? இந்தக் கோட்பாட்டின் மீது எனக்கு நம்பிக்கையில்லை, 370ம் பிரிவும் 35ஏ பிரிவும் காஷ்மீர் பண்டிதர்கள் இங்கு திரும்புவதற்கு இடையூறு அல்ல காரணம் அவர்கள் இங்கு நூற்றாண்டுகளாக வாழ்ந்த பூர்வகுடிகள். அவர்கள் வருகைக்குப் பெரிய இடையூறாக இருப்பது சட்டம் ஒழுங்குதான்” என்றார். 

பியாஸ் அகமட் தார் என்பவர் தன் சகோதரி திருமணத்துக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறார், அவர் கூறும்போது, “எனது இளைய சகோதரிக்கு ஆகஸ்ட்  13ம் தேதி திருமணம் அதற்கான தேவையான ஏற்பாடுகளையும் செய்து விட்டோம். இப்போது இந்த நிலைமையினால் திருமணம் நடக்குமா என்பதே சந்தேகமாகியுள்ளது” என்றார். 

-பிடிஐ.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in