

புதுடெல்லி,
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட அரசமைப்புச் சட்டம் 370 பிரிவை மத்தியஅரசு திரும்பப்பெற்றதன் மூலம், அரசமைப்பு கொடூரத்தை நிகழ்த்தியுள்ளது, ஜம்முகாஷ்மீரில் இதைச் செய்ய முடியுமென்றால், இனி ஒவ்வொரு மாநிலத்திலும் செய்ய முடியும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 1954-ம் ஆண்டு அரசமைப்புச்சட்டம் 370 பிரிவின் கீழ் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு உரிமை அந்தஸ்தை மத்தியஅரசு இன்று ரத்து செய்தது. அதற்கான தீர்மானத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கொண்டு வந்தார். நீண்ட விவாதத்துக்குப்பின் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தின்படி, ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட உள்ளது. சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக்கும், சட்டப்பேரவை உள்ள யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீரும் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாடாளுமன்றத்துக்கு வெளியே காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த அரசமைப்புச் சட்டம் 370 பிரிவை திரும்பப்பெற்றதன் மூலம், பிரதமர் மோடியின் அரசு, அரசமைப்பு கொடூரத்தை நிகழ்த்தியுள்ளது. தொடர்ந்து இதேபாதையில் இந்திய அரசு சென்றால், தேசம் ஒருமைப்பாட்டில் இருந்து சிதைந்துவிடும். அரசமைப்புச் சட்டம் 3 மற்றும் 370 பிரிவை மோசமாகக் கையாண்டு, . ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இதுபோல் செய்ய முடியுமென்றால், உங்களை எச்சரிக்கிறேன், இதை தேசத்தில் மற்ற எந்த மாநிலத்திலும் செய்ய முடியும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை நீக்கிவிட்டு, அங்கு குடியரசு தலைவர் ஆட்சியை கொண்டுவந்து, சட்டப்பேரவையை கலைத்துவிட்டு, அங்கு நாடாளுமன்றம் சட்டப்பேரவையின் அதிகாரத்தை எடுத்துக்கொள்ளும்.
அதன்பின் அரசால் தீர்மானத்தைத் தாக்கல் செய்யும், நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும், மாநிலத்தைப் பிரிக்க முடியும். ஒவ்வொரு மாநிலத்தையும் உடைத்து, பிரித்து யூனியன் பிரதேசங்களாக உருவாக்க முடியும். இந்த செயல் ஜம்மு காஷ்மீரோடு முடிந்துவிடாது.
அவர்கள் செய்துள்ளது அரசியல் கொடுரம். தேசத்தின் மக்களும், ஒவ்வொரு மாநிலத்தின் மக்களும் புதைகுழி ஆபத்தில் இருந்து கண்டிப்பாக விழித்துக்கொள்ளவேண்டும். சட்டவிரோத தீர்மானத்துக்கும், அரசமைப்பு அல்லாததற்கும் இது இன்று மிகப்பெரிய உதாரணம். இந்திய அரசமைப்பு வரலாற்றிலேயே இன்று மிகமோசமான நாள்”
இவ்வாறு சிதம்பரம் தெரிவித்தார்
பிடிஐ