

புதுடெல்லி
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவு ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவுக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
காஷ்மீர் இந்தியாவின் அதிகாரபூர்வ பகுதி அல்ல, சர்ச்சைக்குரிய பகுதி என பாகிஸ்தான் தொடர்ந்து கூறி வருகிறது. ஐ.நா. உட்பட பல இடங்களில் காஷ்மீர் பிரச்சினையை பாகிஸ்தான் தொடர்ந்து எழுப்பி வருகிறது. காஷ்மீர் விவகாரத்தில் பிற நாடுகளும், ஐ.நா. அமைப்பும் தலையிட வேண்டும் எனவும் பாகிஸ்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், மாநிலங்களவையில் இன்று கடும் அமளிக்கு இடையே ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து ஜம்மு - காஷ்மீர் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்படுவதாக அமித் ஷா அறிவித்தார். அதன்படி ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசமாக செயல்படும் என அமித் ஷா அறிவித்தார்.
இதற்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுபோலவே உலக அரங்கில் காஷ்மீர் பிரச்சினையைத் தொடர்ந்து எழுப்பி வரும் பாகிஸ்தானும், மத்திய அரசின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம், ''ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின்படி சர்ச்சைக்குரிய பகுதியான காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசு தன்னிச்சையான முடிவு எதையும் எடுக்க முடியாது. இப்போது எடுக்கப்பட்டுள்ள முடிவு காஷ்மீர் மக்களின் ஒப்புதலைப் பெற்றோ. பாகிஸ்தானின் ஒப்புதலைப் பெற்றோ மேற்கொள்ளப்படவில்லை. எனவே, இது சட்டவிரோதமானது. தொடர்ந்து இந்தப் பிரச்சினையை பாகிஸ்தான் எழுப்பும்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.