ஒரு வரலாற்றுப் பிழை திருத்தப்பட்டிருக்கிறது: சட்டப்பிரிவு 370 ரத்தை வரவேற்று ஜேட்லி கருத்து

ஒரு வரலாற்றுப் பிழை திருத்தப்பட்டிருக்கிறது: சட்டப்பிரிவு 370 ரத்தை வரவேற்று ஜேட்லி கருத்து
Updated on
1 min read

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவுகள் 370, 35 ஏ ஆகியனவற்றை ரத்து செய்திருப்பதால் ஒரு வரலாற்றுப் பிழை திருத்தப்பட்டிருப்பதாகக் கூறியிருக்கிறார் முன்னாள் நிதியமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அருண் ஜேட்லி.

முன்னதாக இன்று (திங்கள்கிழமை) காலை மாநிலங்களவையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் உருவாக்கப்படுகின்றன. இதில் லடாக் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக அமையும் என்று அறிவித்தார்.

எதிர்க்கட்சிகளின் பலத்த அமளிக்கு இடையே அமித் ஷா இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்புக்கு அதிமுக,  ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. பாஜக முக்கியப் பிரமுகர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லி, "ஒரு வரலாற்றுப் பிழை திருத்தப்பட்டிருக்கிறது. சட்டப்பிரிவு 35 ஏ பின்வாசல் வழியாக வந்தது. அதனால் அது போய்தான் ஆகவேண்டும். 1947-ல் ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 1952-ல் அமலுக்கு வந்தது. சட்டப்பிரிவு 35 ஏ 1954-ல்தான் அமலுக்கு வந்தது. அப்படியிருக்கையில் இந்த இரண்டு சட்டப்பிரிவுகளும் காஷ்மீர் இணைப்புக்கான நிபந்தனையாக செயல்பட்டதாக எப்படி கணக்கில் கொள்ள முடியும்.

அத்தகைய வரலாற்றுப் பிழையைத் திருத்தியமைக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் நான் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இரண்டு சட்டப்பிரிவுகளுமே ரத்து செய்யத்தக்கவையே.

தனி அந்தஸ்துதான் பிரிவினைவாதத்துக்கு வித்திட்டது. வளர்ந்துவரும் எந்த ஒரு தேசமும் இத்தகைய சூழல் தொடர அனுமதிக்காது. தற்காலிகமாக வழங்கப்பட்ட சலுகையை நிரந்தரமாகக் கருத முடியாது. அதனால், அந்தச் சட்டப்பிரிவுகள் நீக்கப்பட வேண்டியவையே" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in