

புதுடெல்லி
1984-ல் கலவரம் தொடர்பாக சிறையிலுள்ள முன்னாள் காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமார், தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்யக் கோரிய மனுவை அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்.
1984- ம் ஆண்டு அமிர்தசரஸ் பொற்கோயில் தாக்குதல் சம்பவம் தொடர்பாக அன்றைய பிரதமர் இந்திரா காந்தியை அவரது மெய்க்காப்பாளர் பணியில் இருந்த சீக்கியர்கள் சுட்டுக்கொன்றனர்.
இதனைத் தொடர்ந்து இந்தியாவின் பல இடங்களிலும் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் தாக்கப்பட்டனர். இந்த வன்முறை சம்பவத்தின்போது ஏராளமான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு காரணமாக இருந்ததாக பல காங்கிரஸ் தலைவர்கள் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது.
1984 கலவரத்தில், டெல்லியில் ஐந்து பேரை கொன்றதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் சஜ்ஜன் குமார் (73) மீதும் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், விசாரணை நீதிமன்றத்தில் அக்குற்றச்சாட்டு ரத்து செய்யப்பட்டு வழக்கு தள்ளுபடியானது.
இவ்வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் 17 அன்று, சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது. தண்டனைக்குப்பின் சஜ்ஜன்குமார் காங்கிரஸ் கட்சியிலிருந்த தனது பொறுப்புக்களை ராஜினாமா செய்தார்.
நீதிமன்றத்தில் சரணடைந்து சிறையில் அடைக்கப்பட்டு 7 மாதங்கள் கடந்த நிலையில் சஜ்ஜன் குமார், ஆயுள் தண்டனையை ரத்து செய்யுமாறு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.ஏ.பாண்டே மற்றும் பி.ஆர்.கவாய் அடங்கிய அமர்வு, ''இது சாதாரண வழக்கு இல்லை. இதன்மீதான எந்த உத்தரவு வழங்கப்பட்டாலும் அதற்கு விரிவான விசாணை தேவைப்படுகிறது. எனவே இம்மனுவின் மீதான விசாரணை அடுத்த ஆண்டு மே மாதத்திற்கு ஒத்தி வைக்கப்படுகிறது''. என்று தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தது.