370-வது சட்டப்பிரிவு ரத்து: மசோதாவை கிழித்தெறிந்து மாநிலங்களவையில் கடும் அமளி; வெளியேற்றப்பட்ட காஷ்மீர் எம்.பி.க்கள்

370-வது சட்டப்பிரிவு ரத்து: மசோதாவை கிழித்தெறிந்து மாநிலங்களவையில் கடும் அமளி; வெளியேற்றப்பட்ட காஷ்மீர் எம்.பி.க்கள்
Updated on
1 min read

புதுடெல்லி


ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவு ரத்து, 2 மாநிலங்களாக பிரிக்கும் மசோதா நகல்களை மாநிலங்களவையில் மக்கள் ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் கிழித்தெறிந்து அமளியில் ஈடுபட்டனர். அவர்கள் சபை காவலர்களால் வெளியேற்றப்பட்டனர். 

மாநிலங்களவையில் இன்று கடும் அமளிக்கு இடையே ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார். இதுதொடர்பான மசோதாவை அவர் தாக்கல் செய்தார். 

இதைத்தொடர்ந்து ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை 2 ஆக பிரிக்கப்படுவதாக அமித் ஷா அறிவித்தார். அதன்படி ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசமாக செயல்படும் என அமித் ஷா அறிவித்தார். 

மாநிலங்களவையில் மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அப்போது ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவு ரத்து, 2 மாநிலங்களாக பிரிக்கும் மசோதா நகல்களை மக்கள் ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் கிழித்தெறிந்து அமளியில் ஈடுபட்டனர்.

இதற்கு அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர்களை அவையில் இருந்து வெளியேற்றுமாறு அவர் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து அவர்கள் சபை காவலர்களால் வெளியேற்றப்பட்டனர். மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பியபடி அவர்கள் வெளியே வந்தனர். 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in